×

புனிதவெள்ளி நோன்பு கடைபிடிப்பால் திப்பம்பட்டி சந்தையில் மாடு விற்பனை மந்தம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட இடத்தில் உள்ள மாட்டு சந்தைக்குக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது. இதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி சென்றனர். ஆனால், கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் திப்பம்பட்டியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மாட்டு சந்தையால், நகராட்சி மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்தின்றி நின்றுபோனது. கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக, திப்பம்பட்டி மாட்டு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன.

வார சந்தை நாளான செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக வந்து விலை நிர்ணயம் செய்து, மாடுகளை வாங்கி சென்றாலும், அதிகபடியாக கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தே வியாபாரிகள் வருகின்றனர். இந்நிலையில், தற்போது புனித வெள்ளி நோன்பு கடைபிடிப்பால் கடந்த சில வாரங்களாக கேரள வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. அதுபோல் இந்த வாரத்தில் நேற்று, நடந்த சந்தை நாளில், சுற்றுவட்டாரத்திலிருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும் மாடுகள் வரத்து ஓரளவு இருந்துள்ளது. ஆனால் நேற்றும் கேரள வியாபாரிகள் வருகை குறைவால் மாடு விற்பனை தொடர்ந்து மந்தமானது.

கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதியிலிருந்தே  விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள்,  குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து மாடுகளை வாங்கி சென்றனர். கடந்த மாதம் துவக்கத்தில் ரூ.35ஆயிரத்துக்கு விலைபோன காளைமாடு நேற்று ரூ.28ஆயிரத்துக்கும், ரூ.32ஆயிரத்துக்கு விலைபோன பசுமாடு ரூ.27ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.28ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.12ஆயிரத்துக்கு கீழும் என குறைவான விலைக்கு விற்பனையானது. இருப்பினும், மாலைநேரமாகியும்  பல மாடுகள் விற்பனையாகாமல் தேக்கமானது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thampampatti , Thippampatti, market, cow
× RELATED ஒரு மாதத்திற்கு பிறகு திப்பம்பட்டி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு