×

அகஸ்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா : கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம், அங்கபிரதட்சணம்

அம்பை: கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவில் நேற்று பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் கும்பிடு நமஸ்காரம், அங்கபிரதட்சணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட  உலோபாமுத்திரை சமேத அகஸ்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

7ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 4 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  காலை 7.40 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி நடந்த தீபாராதனையை அடுத்து வீதியுலா நடந்தது. காலை 10.40 மணிக்கு மேல் விரதமிருந்த பக்தர்கள்  தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். யானை முன் செல்ல மேளதாளம்,முழங்க பக்தர்கள் குடை பிடித்தபடி தீர்த்தகுடம், பால்குடம்  எடுத்து வந்தனர்.
அப்போது  கொளுத்தும் வெயிலில் ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தனர். தொடர்ந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது, ‘‘பொதிகாசலம், அருணாசலம், தட்சிணாமூர்த்தி’’ என்று பக்தி கோஷமிட்டனர்.

பின்னர் சுவாமிக்கு பால்குடம், தீர்த்தக்குட அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு அன்னமடத்தில் அன்னம் சொரிதல் நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமி  அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு புஷ்ப அலங்கார மின்னொளி சப்பரத்தில் எழுந்தருளினர். இரவு 8 மணிக்கு குமாரகோயில் தெற்கு ரத வீதியில் அகஸ்தீஸ்வரருக்கு முருகப்பெருமான் உபதேச காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், சிறப்பு வாணவேடிக்கையும் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் சங்கரநாராயணன், சுப்பிரமணியன், ஆர்.சுப்பிரமணியன், ஆலோசகர்கள் சங்கரன்,  சங்கரலிங்கம் செயற்குழு உறுப்பினர்கள் முருகன், ராஜேந்திரன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன், பெருமாள், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட  நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Month Festival ,Agastheeswarar Temple ,Kumbhudu Namaskara , Agastheeswarar temple,panguni festivals,devotees
× RELATED மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா