×

ஆம்பூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை : கம்பு, தீப்பந்தம் எடுத்து வந்து விரட்டியடித்த கிராம மக்கள்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையை அப்பகுதி மக்கள் கம்பு, தீப்பந்தம் எடுத்து வந்து விரட்டி அடித்தனர்.
ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட துருகம், சாணாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு காப்புக்காடுகளில் மான்கள், மலைப்பாம்பு, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காப்புகாடு அருகே அரங்கல்துருகத்தை ஒட்டி உள்ள ஊராட்சி பகுதிகளில் சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. இந்த சிறுத்தை ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த பலரது ஆடு, மாடுகளை கடித்து குதறி கொன்றது.

இதுகுறித்த புகாரின்பேரில் வனத்துறையினர், பொன்னபல்லி அருகே வனப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகளை வைத்தனர். ஆனால் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கவில்லை. தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். அதில், சிறுத்தை சுற்றித்திரிவது தெரிந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அபிகிரி பட்டறை, அரங்கல்துருகம், பொன்னபல்லி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களை இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், கால்நடைகளை உரிய பாதுகாப்புடன் அடைத்து வைக்கவும் அறியுறுத்தினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் அபிகிரி பட்டறையை சேர்ந்த ஜெயபால் என்பவரின் வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த மாடுகள் கத்திய சத்தம் கேட்ட ஜெயபால் மனைவி அங்கு சென்று பார்த்தார். அப்போது, அருகே ஒரு மாட்டை சிறுத்தை கடிக்க முயன்றதை கண்டு கூச்சலிட்டார். இதைகேட்ட ஜெயபால் மற்றும் அக்கம் பக்கத்தினர் கம்பு, தீப்பந்தம் எடுத்து வந்து சிறுத்தையை விரட்டியடித்தனர். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பிச்சென்றது.  தகவலறிந்த, வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தை கிராமத்திற்கு உள்ளே புகுந்ததால் கிராமமக்கள் பெரும் அச்சம் அடைந்து இரவு முழுவதும் தூக்கத்தை இழந்து தவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : village ,Ambur , Ambur, leopard, villagers
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...