×

பெண் மர்ம மரணம் விசாரணையில் அமைச்சர் தலையீடு செய்ததால் போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண் மர்ம மரணம் தொடர்பான  விசாரணையில் அமைச்சர் ஓ. எஸ்.மணியன் தலையிட்டதால் போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஆறுமுகம், தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது உறவினர் சவுந்தர்யாவுக்கும் வேதாரண்யத்தை சேர்ந்த அசோக் என்பவருக்கும் கடந்த 2013ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2018ல் இரட்டை குழந்தையும் பிறந்தது.
 திருமணத்திற்கு சவுந்தர்யாவிடம் புகுந்த வீட்டில் அடிக்கடி  வரதட்சணை கேட்டதால் கணவன் -மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென சவுந்தர்யா இறந்து விட்டதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் அசோக்  வீட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, சவுந்தர்யாவின் உடலை பிரேத பரிசோதனை எதுவும் செய்யாமல் அவசர அவசரமாக எரித்து விட்டனர். சவுந்தர்யா மரணம் தொடர்பாக அவரது  வீட்டில் உள்ளவர்கள் அசோக் வீட்டில் விசாரிக்க முற்பட்டபோது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அதில் தலையிட்டு சவுந்தர்யாவின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளார்.
  இதுதொடர்பாகவும், பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தஞ்சாவூர் டிஎஸ்பியிடம் புகார் அளித்தோம். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வந்த நேரத்தில் தேவையில்லாமல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திடீரென  தலையிட்டு சவுந்தர்யா மரணம் குறித்த விஷயத்தை சுமுகமாக முடித்துக் கொள்ளவேண்டும் என்று பெண்ணின் உறவினர்களை வற்புறுத்தியுள்ளார். இவ்வாறு, போலீஸ் விசாரணையில் அமைச்சர் தலையிட்டுள்ளதால் விசாரணை நேர்மையான முறையில் நடைபெறாது. எனவே இந்த வழக்கை கொலை வழக்காக  மாற்றம் செய்து சிபிசிஐடி விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜான் சத்தியன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி,  வேதாரண்யம் போலீசாரின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : police interrogation ,minister ,Supreme Court , minister,death , mysterious death, police investigation, High Court order
× RELATED டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு...