×

விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது: ஈகுவடார் அரசு ஆதரவு வாபஸ்

லண்டன்: லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் ஜூலியன் அசாஞ்சே. இதனால் அமெரிக்க அரசு இவரை கைது செய்ய இருப்பதாக அறிவித்தது. இதனிடையே பாலியல் வழக்கில் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க, அவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், பிரிட்டன் மெட்ரோபாலிட்டன் போலீசார் நேற்று அவரை கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து மெட்ரோபாலிட்டன் போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில், ``ஜூலியன் அசாஞ்சே மத்திய லண்டன் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். விரைவில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். ஜாமீனில் வெளியே சென்ற அவர் மீண்டும் சரணடையாததைத் தொடர்ந்து, கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அதன் அடிப்படையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அளித்து வந்த அகதிகள் ஆதரவை ஈகுவடார் அரசு திரும்ப பெற்றதை அடுத்து, லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரக அதிகாரியின் அழைப்பின் பேரில் அவரை கைது செய்தோம்’’ என்றார்.இதையடுத்து, அவர் எந்நேரமும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம் என்றும் அங்கு அவருக்கு மரண தண்டனையோ அல்லது விக்கிலீக்ஸ் மூலம் ரகசியங்களை வெளியிட்டது குறித்த விசாரணையோ நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Julian Assange ,WikiLeaks ,government ,London ,Ecuador , WikiLeaks, co-founder, Julian Assange,London
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்