×

வீரபத்ரனா கொக்கா!

கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்திரன் என்கிற கேரக்டரில்தான் சினிமாவில் அறிமுகம் ஆனார் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பளிச்சென ஒட்டிக்கொண்டார். அதற்கு அந்த வீரபத்திரன் (சந்தன கடத்தல் வீரப்பனின் கேரக்டரை தழுவியது) கேரக்டரில் மன்சூர் காட்டிய தெனாவட்டான நடிப்புதான் காரணம். ‘வீரபத்ரனா கொக்கா’ என அப்போது பிரபலமாகிப்போன அந்த பன்ச் வசனத்தோடுதான் படத்தில் அறிமுகம் ஆவார். படத்தில் ஹீரோ விஜயகாந்துக்கு இணையான வேடம் அது. அந்த ரோலில் நடிக்க மன்சூர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அப்போதெல்லாம் புதுமுக இயக்குனர்கள், புதுமுக வில்லன் நடிகர்களுக்கு வாய்ப்புக்கான வாசலாக இருந்தது விஜயகாந்தின் அலுவலகம்தான். அங்குதான் தினமும் வந்து மன்சூர் தவம் கிடப்பார். அதுவும் விஜயகாந்த் படத்தில் வில்லன் வேடம் கிடைத்துவிட்டால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்கிற நிலை அப்போது. அதனால் நடித்தால் வில்லன்தான் என்பதிலும் மன்சூர் தீர்மானமாக இருந்தார்.

சரியாக ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் கேப்டன் பிரபாகரன் படம் ஆரம்பிக்கும்போது, மன்சூரை வில்லனாக்கிவிட்டார் விஜயகாந்த். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் படு பிசியானார் மன்சூர். 57 வயதாகும் மன்சூரின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஜவ்வாதுபட்டி. இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவியை பிரிந்துவிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்திலும் வடபழனியிலும் சொந்தமாக 2 வீடுகள் இருக்கிறது. தொடர்ந்து படங்களில் வில்லனாக நடித்து வந்த இவர், திடீரென ஹீரோவானார். அந்த படங்களை தானே தயாரித்து, இயக்கி, இசையமைத்து உருவாக்கினார். சிங்கம் 2, நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்கள் காமெடி கேரக்டர்களில் நடிக்க வழி திறந்து விட, இப்போது பல படங்களில் அதுபோல் நடித்து வருகிறார். இந்நிலையில் சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் போலீசார் இவரை கைது செய்தனர்.

இப்படி இமேஜ் ஏறி இறங்கி பின் ஏறி என போய்க்கொண்டிருந்தபோது திடீரென நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார். வில்லனாக இருந்த காமெடியன் ஆனதுபோலவே தொகுதியில் இவர் செய்யும் பிரசார உத்திகளும் பொதுமக்களுக்கு பொழுதுபோக்காகிக் கொண்டிருக்கிறது. மூஞ்சிக்கல் பகுதியில் செருப்பு தைக்கும் கடையில் அமர்ந்து ஷூக்களுக்கு பாலீஷ் போட்டார். டீ கடையில் டீ ஆற்றிக்கொடுத்தார். பழனி சுற்றுவட்டாரத்தில் வயல்வெளியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர், சேலையில் தொட்டில் கட்டி படாத பாடு பட்டு குழந்தையை தூங்க வைத்திருக்கிறார். அப்போது என்ட்ரியான மன்சூர், ‘நான் குழந்தையை தூங்க வைக்கிறேன்’ என சொல்லி, பாட்டுப்பாடி தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எழுப்பி அழ வைத்திருக்கிறார். இப்படி இவர் பிரசாரத்துக்கு போகிற இடமெல்லாம் கலகல காட்சிகளுக்கு பஞ்சமில்லை. சமீபத்தில் வெயிலில் பிரசாரம் செய்ய முடியாமல் மயங்கியும் விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.சினிமாவில் ‘வீரபத்ரனா கொக்கா’ என கொக்கரித்தவர், அரசியலில் கவுண்டமணி சொல்வதுபோல் கொக்கா மக்காவாகிப்போகாமல் இருந்தால் சரி.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Veerabhadrana Coca , Veerabhadrana, Coca!
× RELATED மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற நாம்...