×

குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று ரேபரேலியில் சோனியா மனுத்தாக்கல்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி மக்களவை தொகுதியில் சோனியா காந்தி கடந்த 2004ம் ஆண்டு முதல் எம்பி.யாக உள்ளார். தற்போது அவர் 5வது முறையாக இங்கு போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ரேபரேலியில் சோனியா நேற்று மனுத்தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக, ரேபரேலி தொகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த பூஜையில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர்,  காரில் பேரணியாக சென்று மனுத்தாக்கல் செய்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா உடன் இருந்தனர். இந்த தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பாஜ சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். இவர் காங்கிரசில் இருந்து விலகி சமீபத்தில் பாஜ.வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சோனியாவுக்கு எதிராக இத்தொகுதியில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

* மோடி வீட்டுக்கே சென்று விவாதம் நடத்த தயார்:

சோனியா மனுத்தாக்கல் செய்த பிறகு பேட்டியளித்த ராகுல், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் மோடி எதையும் செய்யவில்லை. ரபேல் ஒப்பந்தம் எப்படி மோடியின் நண்பர் அனில் அம்பானிக்கு சென்றது? இது தொடர்பாக மோடி என்னுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட தயாரா? இதற்காக நான் அவரது இல்லத்துக்கே செல்ல தயார்? இந்த விவாதத்துக்கு பின் மோடி யார் கண்ணையும் பார்த்து பேசமாட்டார் என்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன். பிரதமர் என் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும். அதை சந்திக்க நான் தயார். ரபேல் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடி மீள முடியாது. தேர்தலுக்குப்பின் ரபேல் ஊழல் நிருபிக்கப்படும்’’ என்றார்.

* சோனியா காந்தியிடம் பாடம் கற்க வேண்டும்:

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா டிவிட்டரில் விடுத்த செய்தியில், ‘அரசியலின் அர்த்தம் பொதுச்சேவை மற்றும் அர்ப்பணிப்பு. ஒவ்வொரு அரசியல்வாதியும் நாட்டு மக்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ரேபரேலி மக்களுக்காக முழு ஈடுபாட்டுடன் என் தாய் செயல்பட்டார். அவரிடம் இருந்து ஒவ்வொரு வேட்பாளரும், அரசியல்வாதியும் பாடம் கற்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

* ‘புத்திசாலித்தனமாக ஓட்டு போடுங்கள்’

முதல்கட்ட தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு ராகுல் டிவிட்டரில் நேற்று விடுத்த செய்தியில், ‘இந்தியாவின் ஆன்மாவுக்கு நீங்கள் வாக்களிக்கிறீர்கள். நாட்டின் எதிர்காலத்துக்கு புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள். 2 கோடி வேலை கிடைக்கவில்லை. வங்கி கணக்கில் ₹15 லட்சம் வரவில்லை. நல்ல நாட்கள் வரவில்லை. பணமதிப்பிழப்பு, விவசாயிகள் வேதனை, மோசமான ஜிஎஸ்டி, ரபேல், பொய்கள், அவநம்பிக்கை, வன்முறை, வெறுப்பு, அச்சம் ஆகியவைதான் கிடைத்தது’ என குறிப்பிட்டுள்ளார்.

* சோனியா சொத்து மதிப்பு ₹11.82 கோடி

வேட்பு மனுவுடன் சோனியா காந்தி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்து மதிப்பு ₹11.82 கோடி என்று தெரிவித்துள்ளார். இதில், அசையும் சொத்தின் மதிப்பு ₹4.29 கோடி என்று கூறியுள்ளார். மேலும், தனது மகன் ராகுல் காந்திக்கு ₹5 லட்சம் கடன் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். வங்கி இருப்பு ₹16.50 லட்சம் என்றும், மொத்த கையிருப்பு ₹60 லட்சம் என்றும் கூறியுள்ளார். தன் மீது பாஜ எம்.பி. ஒருவரின் கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் சோனியா தெரிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில், அவரது சொத்து மதிப்பு ₹9.28 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sonia ,Rae Bareilly , Family, Procession, Sonia. Appeal
× RELATED சமத்துவ இந்தியா உருவாக...