மக்களுக்கு அறிமுகம் இல்லாத தமாகா வேட்பாளர்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்பட்ட தஞ்சாவூரில் உலக பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டு பழமையான பெரியகோயில் அமைந்துள்ளது. அத்துடன் உலக புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகம், கல்லணை போன்ற பெருமைகளை கொண்டது தஞ்சாவூர். கடந்த 2004 எம்.பி. தேர்தல் வரை தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், திருவோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய 10 தொகுதிகள் இருந்தன. அதன்பின் 2009ல் நடந்த தொகுதி சீரமைப்புக்கு பிறகு  திருவோணம், வலங்கைமான் தொகுதிகள் கலைக்கப்பட்டன. மேலும் பாபநாசம் தொகுதி மயிலாடுதுறையுடனும், மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) தஞ்சை மக்களவை தொகுதியுடனும் சேர்க்கப்பட்டன. இதையடுத்து தஞ்சை மக்களவை தொகுதியில் தஞ்சை, திருவையாறு, மன்னார்குடி (திருவாரூர்), ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

தற்போது இத்தொகுதியில் திமுக, த.மா.கா., அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய போட்டி திமுக, த.மா.கா., அமமுக இடையேதான். தஞ்சை தொகுதியில் நிலவும் மும்முனை போட்டியில் யார் முந்துகின்றனர் என்பதை பார்ப்போம். சென்ற முறை அதிமுக தன் வசம் இருந்த இத்தொகுதியை இந்த முறை கூட்டணி கட்சியான தமாகாவிற்கு விட்டுக்கொடுத்துள்ளது. அதிமுகவின் முழு கவனமும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தான் இருக்கிறது. இதனால் தமாகாவினர் கூட்டணி கட்சியை நம்பாமல் 6 தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்று வேலை பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் இப்போது தான் முழு அரசியல்வாதியாக அறிமுகமாகியுள்ளார். அவரது சகோதரர் என்.ஆர்.ரெங்கராஜன் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவர். ஆனால் என்.ஆர்.நடராஜன் தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர். இதனால் அதிமுக, பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளையே பெரிதும் நம்பியுள்ளார். ஆனால் அங்கு யாரும் இவரை கண்டு கொள்வதாக இல்லை. 6ம் தேதி தான் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை தஞ்சையில் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.இந்த அறிக்கையை எப்போது மக்களிடம் எடுத்து செல்வது? அதற்கு போதிய கால அவகாசம் உள்ளதா? என்பது அவர்களுக்கே வெளிச்சம். போதாக்குறைக்கு ஆட்டோ சின்னமும் இப்போது தான் அறிமுகமாகி வாக்காளர்களிடம் சென்று சேர்க்க கடும் போராட்டத்தில் உள்ளனர்.

அமமுக வேட்பாளர் பொன்.முருகேசனும் தற்போது தான் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அவரும் தொகுதி மக்களுக்கு பரிட்சையமற்றவர். அவரது சின்னமும் தற்போது தான் மக்களுக்கு தெரியவந்துள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் துவக்கம் முதலே உற்சாகமாக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஏனெனில் இவர் ஏற்கனவே 8 முறை தஞ்சை தொகுதியில் போட்டியிட்டவர். 1984, 1989, 1991ல் 3 முறை வெற்றி வாய்ப்பை இழந்தபோதிலும், பின்னர் 1996, 1998, 1999, 2004, 2009ம் ஆண்டுகளில் தொடர்ந்து களத்தில் நின்று 5 முறை வெற்றி பெற்றார். சென்ற முறை அதாவது 2014ம் ஆண்டு அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.தற்போது 9வது முறையாக போட்டியிடுகிறார்.

இதுவரை தமிழகத்தில் எந்த வேட்பாளரும் 9 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்டதாக வரலாறு இல்லை. இதனால் இவருக்கு தொகுதியில் அறிமுகம் தேவையில்லை. மேலும் தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐஜேகே, தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் கழகம் என வலுவுடன் உள்ளது. இதனால் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கிட்டத்தட்ட வெற்றி அடைந்துவிட்டார் என்பதை எதிர்க்கட்சியினரே உணர்ந்துள்ளனர். அதிமுக வாக்குகள் அனைத்தும் அமமுகவுக்கு செல்கின்றன. அமமுகவுக்கும் குறிப்பிட்ட சமூக வாக்குகள் மட்டுமே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், தஞ்சையில் உதயசூரியன் தான் உதிக்கும் என்கின்றனர் தஞ்சை மக்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>