×

அம்மா போயிடாதீங்க... அண்ணி இப்ப வந்துடுவாங்க: பொதுமக்களிடம் தேமுதிகவினர் கெஞ்சல்

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு வேலூர் சார்பனாமேடு பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக, பாஜ., தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர் படை, தேர்தல் பிரசாரம் செய்ய வரும் ‘அண்ணியாரை’ மகிழ்விக்கும் வகையில் கூட்டம் சேர்ப்பதில் இறங்கியது. மாலை 6 மணிக்கு ஒருவழியாக கூட்டத்தை சேர்த்தனர். கூட்டம் கலையாமல் இருக்க இன்னிசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. தாரை, தப்பட்டை, வாண வேடிக்கைகள் என பிரசார நிகழ்ச்சி களைகட்டியது.  மாலை 6 மணியளவில் மைக்கில் பேசிய தேமுதிக நிர்வாகிகள், தேமுதிக பொருளாளர் அண்ணியார் உங்களை சந்திக்க, ‘இதோ வந்து விட்டார், அதோ வந்து விட்டார்’, என ஒருபுறம் ரன்னிங் கமென்ட்ரி கொடுத்தபடி இருந்தனர். பின்னர், 8 மணிக்கு வந்து விடுவார் என்று கூறப்பட்டது.

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த கூட்டம் களைய தொடங்கியது. அப்போது தேமுதிக பிரமுகர்கள் பொதுமக்களை பார்த்து ‘அம்மா... போயிடாதீங்க, போயிடாதீங்க’ என்று மைக்கில் கெஞ்சியபடி இருந்தனர்.இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் வருவது சந்தேகம் என்று திடீரென அங்கு தகவல் பரவியது. இதனால் விரக்தியடைந்த அதிமுகவினர், அங்கு கூடியிருந்தவர்களிடம் கொடுத்திருந்த கட்சி கொடிகளை திரும்ப பெற்றுக் கொண்டு, ‘நாளைக்கு பார்க்கலாம்’ என்று அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இரவு 10.15 மணிக்கு பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களை பார்த்து கும்பிடு போட்டபடியே வந்தார். அப்போது தொண்டர்கள் பேசுமாறு கூறினர்.

ஆனால், பிரேமலதா சிரித்தபடி விரலில் இரட்டை இலைக்கு ஆதரவு அளிக்குமாறு வேனில் இருந்தபடி சைகை காட்டியவாறு மவுனமாக 15 நிமிடங்கள் வாக்கு சேகரித்துவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் ‘இந்த அம்மா எதுக்கு வரணும், ஓட்டு கேட்டு வரும்போதே நேரத்துக்கு வரல... தேர்தல்ல ஜெயிச்சிட்டா... அவ்ளோதான். அதுக்கப்புறம் காலம் முழுக்க நாமதான் நின்னுக்கிட்டு இருக்கணும்’ என்று முணுமுணுத்தபடியே நடையை கட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sister-in-law , dmdk
× RELATED மைத்துனி வீட்டில் பதுங்கி இருந்த போது பிரபல ரவுடி பினு மீண்டும் கைது