×

விறுவிறுப்பாக நடந்தது முதல் கட்ட தேர்தல் 91 தொகுதியில் 65% வாக்குப்பதிவு

* சந்திரபாபு - ஜெகன் கட்சியினர் மோதலில் 2 பேர் பலி
* இயங்காத ஓட்டு மிஷினை நொறுக்கிய வேட்பாளர் கைது

புதுடெல்லி: நாட்டின்  17வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இத்துடன் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடந்தன. இவற்றில் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின. நாட்டின் 17வது மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10ம் தேதி அறிவித்தது. ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்ட தேர்தல் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் 6 மணி வரை நடந்தது. ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், அருணாச்சலப் பிரதேசம் 2, அசாம் மாநிலத்தில் 5, பீகாரில் 4, சட்டீஸ்கரில் 1, ஜம்மு-காஷ்மீரில் 2, மகாராஷ்டிராவில் 7, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றில் தலா 1, மேகாலயாவில் 2, ஒடிசாவில் 4, உத்தரப்பிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்குவங்கத்தில் 2 தொகுதிகள் என 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இவற்றில் மொத்தம் 1,279 வேட்பாளர்கள் நேற்று தேர்தலை சந்தித்தனர்.  

இத்துடன் ஆந்திராவில் 175 சட்டபேரவை தொகுதிகள், சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டப்பேரவை தொகுதிகள், அருணாச்சலப் பிரதேசத்தில் 57 சட்டப் பேரவை தொகுதிகள், ஒடிசாவில் முதல்கட்டமாக 28 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேற்று தேர்தல் நடந்தது. முதல்கட்ட தேர்தலை முன்னிட்டு இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தொகுதிகளில் வாக்களிக்க மொத்தம் 14 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 65 சதவீதம் பேர் நேற்று வாக்களித்தனர். பல இடங்களில் தேர்தல் அமைதியாக நடந்தது. அண்டை மாநிலமான ஆந்திராவில் தெலங்கு தேசம் கட்சியினர் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே நேற்று நடந்த மோதலில் 2 பேர் பலியாயினர். பல வாக்குச்சாவடிகளில் எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரங்கள் பழுதானதாக புகார்கள் எழுந்தன. அங்கு மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை காணவில்லை என பல வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர்.

ஜனசேனா வேட்பாளர் கைது: ஆந்திராவின்  அனந்தப்பூர் மாவட்டம், குந்தக்கல் தொகுதிக்குட்பட்ட குத்தி வாக்குச்சாவடி  மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சட்டப்பேரவை, மக்களவை தொகுதிகள்  குறித்து சரியான முறையில் எழுதவில்லை எனக்கூறி ஜனசேனா கட்சியின் வேட்பாளர்  மதுசூதன் குப்தா, வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  பின்னர், திடீரென ஆவேசமடைந்த அவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில்  போட்டு உடைத்தார். இதையடுத்து அங்கிருந்த போலீசார், மதுசூதன் குப்தாவை கைது  செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்களும், 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,118 வேட்பாளர்களும் ேநற்று தேர்தலை சந்தித்தனர்.  குப்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், புலிவெந்துலா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் போட்டியிட்டனர்.  இவர்கள் தங்களது வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வந்து காலையிலேயே வாக்களித்தனர். ஆந்திர மக்கள் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இங்கு ஒட்ட மொத்தமாக 73 சதவீத வாக்குகள் பதிவானது. ஒடிசாவில் 4 மக்களவைத் தொகுதிகள், 147 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நட்தது. நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள தொகுதிகள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது.  சிக்கிம் மாநிலத்தில் 1 மக்களவைத் தொகுதி, 32 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
முதல்கட்ட தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருந்தது. இதனால் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை.  வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவை உறுதிப்படுத்தத் தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னதாக நடத்தப்பட்டதால், அப்பகுதிமக்கள் அதிகாலை முதலே வாக்கு சாவடிகளுக்கு வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். திரிபுராவில் சராசரியாக 78 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. எனினும், ஒட்டுமொத்தமாக 91 மக்களவை தொகுதிகளுக்கும் சேர்த்து சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோதலில் 2 தொண்டர்கள் பலி
ஆந்திராவின் தாடிபத்திரி தொகுதி, வீராபுரம் கிராமத்தில் தெலுங்கு தேசம்  கட்சியினருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே  வாக்குச்சாவடி அருகே கடும் மோதல் ஏற்பட்டது. வாக்காளர்களிடம் தங்கள்  கட்சிக்கு வாக்களிக்க வற்புறுத்தியதால் இந்த மோதல் ஏற்பட்டது. இதில்  தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சித்தா பாஸ்கர் ரெட்டி என்பவர் பலத்த காயம்  அடைந்தார். அவரை உடனடியாக அனந்தப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார்  கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும்  வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பூத்தில் மட்டும்  தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதேபோல் தாடிபத்திரியில் நடந்த  மோதலில் தெலுங்கு தேசம் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

சபாநாயகர் சட்டை கிழிப்பு
குண்டூர்  மாவட்டம், சத்தினபல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ராஜுபாளையம்  கிராமத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவை தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரும்,  சபாநாயகருமான கோடல்ல சிவபிரசாத் பார்வையிட சென்றார். அப்போது ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல்  ஏற்பட்டது. இதில் சிக்கிய சபாநாயகர் கோடல்ல சிவபிரசாத் நிலைதடுமாறி கீழே  விழுந்தார். அப்போது அவரது சட்டை கிழிக்கப்பட்டது. தொடர்ந்து  இருதரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituencies ,phase , election,,Chandrababu, Jegan Party
× RELATED தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும்...