×

கடனில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்: இன்று சர்வதேச விமானங்கள் ரத்து

மும்பை:  கடனில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு விமான சேவை நடத்துவதற்கு சிக்கல் எழுந்துள்ளது. நாட்டில் 2வது பெரிய விமான சேவை நிறுவனமாக இது இருந்தது. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் இந்தியாவில் 119 விமானங்களை கொண்டு சேவையாற்றி வருகிறது. 25 ஆண்டுகளை கடந்த நிலையில், முறையற்ற நிர்வாகம், விமான பராமரிப்பில் கவனம் செலுத்தாதது, எரிபொருள் சிக்கனம் கொண்ட விமானங்களை பயன்படுத்த தவறியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்தது. கடன் சுமை சுமார் ரூ.7,000 கோடியை தாண்டியது.

தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. எத்தியோப்பியா விமான விபத்துக்கு பிறகு 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை நிரந்தரமாக நிறுத்தி உள்ளது. கடன் சுமையால் விமானிகள் மற்றும் விமான நிறுவன பணியாளர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதையடுத்து சம்பள பாக்கியை தரவில்லை. இதை தொடர்ந்து இந்த நிறுவனத்துக்கு அதிக அளவில் கடன் அளித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமையில் கடன் அளித்தவர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் நிர்வாக குழுவில் இருந்து விலகினர். இதனையடுத்து பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் நிர்வாகத்தை ஏற்றுள்ளன. நிறுவனத்தை மீட்டெடுக்க ரூ.1,500 கோடி கடன் உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நிலையில் 123 விமானங்களை கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் தற்போது 15 விமானங்களை தான் கொண்டுள்ளது. வெளிநாட்டுக்கு சேவை வழங்க வேண்டுமானால் ஒரு நிறுவனத்திடம் 20 விமானங்கள் இருக்க வேண்டும். ஜெட் ஏர்வேஸ் உரிய தொகையை தராததால் பல நிறுவனங்கள் குத்தகைக்கு கொடுத்திருந்த விமானங்களை திரும்ப பெற்றுவிட்டன.

இதனை தொடர்ந்து சர்வதேச சேவையை ஜெட் ஏர்வேஸ் வழங்க முடியுமா என மத்திய அரசு முடிவு செய்யும். இந்நிலையில் இன்று இரவு வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஜெட்ஏர்வேஸ் அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஜெட்ஏர்வேஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.நாளை புறப்படவிருந்த மும்பை - கொல்கத்தா - குவகாத்தி விமானங்களும் ரத்து செய்யப்படுகிறது. விமானங்கள் ரத்தாவதால் பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஜெட்ஏர்வேஸ் கட்டணத்தையும் திருப்பி தருவதாக ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு முன்பு 2013ம் ஆண்டும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்துக்கு இதேபோன்ற நிதி நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, அபுதாபியை சேர்ந்த எடிகட் விமான நிறுவனம் 24 சதவீத பங்குகளை வாங்கி 60 கோடி டாலர் முதலீடு செய்து உதவியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : firms ,Jet Airways ,flights , Jet Airways company, canceled international flights,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...