சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு சிலைகள் மாயமாகி வந்ததால், சிலைகள் கடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த சிலை கடத்தல் திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பல சிலைகளை பறிமுதல் செய்தார். மேலும் சிலை கடத்தலில் தொடர்புடைய பல குற்றவாளிகளை கைது செய்தார்.

சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமனம்

அதில் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருந்ததால் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியது. சிலைக் கடத்தல் வழக்குகள் குறித்து ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், அதற்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கி, அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து உத்தரவிட்டது.

தமிழக அரசு எதிர்ப்பு

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த வாரம் டிராபிக் ராமசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது அதன் அதிகார வரம்புக்கு மீறியது என்றும், இது தமிழக அரசின் உரிமையை பறிக்கும் செயல் என்றும் கூறினார்.

பொன். மாணிக்கவேல் மீது புகார்

நீதிமன்றங்கள் ஒரு குறிப்பிட்ட வழக்கினை மேற்பார்வையிட வேண்டுமானால் அதிகாரியை நியமிக்கலாம் தவிர விசாரணை அதிகாரியை நியமிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார். பொன். மணிக்கவேலுக்கு எதிராக சக போலீஸ் அதிகாரிகள் 60 புகார்கள் அளித்துள்ளதாகவும், சரியான ஆய்வுகள் இல்லாமல் செயல்பட கூடியவர் என்பதால் தான் அவரை எதிர்க்கிறோம் என்றும் அவர் கூறினார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கன்வில்கர், கே.எம்.ஜோசப் அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>