×

கட்சியில் சேர வற்புறுத்தி வீடு புகுந்து அதிமுகவினர் அராஜகம்: அமமுக தொண்டர் மீது கொடூர தாக்குதல்

* குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த போலீஸ்
* காவல்நிலையம் முற்றுகை; அதிரடிப்படை குவிப்பு

தஞ்சை: அதிமுகவில் சேர வற்புறுத்தி வீடு புகுந்து அமமுக தொண்டர் மீது அதிமுகவினர் நடத்திய கொடூர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை சேவப்பநாயக்கனவாரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32), அமமுக தொண்டர். இவரை அதிமுகவில் சேரும்படி அந்த பகுதியை சேர்ந்த அதிமுகவினர் கூறி வந்தனர். ஆனால் சத்தியமூர்த்தி அதிமுகவில் சேராமல், அமமுகவுக்கு ஆதரவு திரட்டி வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு சத்தியமூர்த்தி வீட்டுக்குள் புகுந்து 5 பேர் அவரை சரமாரியாக கைகளாலும், கட்டையாலும் தாக்கினர். இதில் அவர் ரத்தகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் தஞ்சை மேற்கு போலீசார் அங்கு வந்து சத்தியமூர்த்தியை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அதிமுகவினரிடம் தகராறு செய்ததாக கூறி, அவரை விசாரித்தனர். அப்போது சத்திய மூர்த்தி அதிமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சரவணன், மணி உள்ளிட்ட 5 பேர் இன்று அதிகாலை வீடு புகுந்து என்னை தாக்கினார்கள். அதிமுகவில் சேரும்படி வற்புறுத்தினர். நான் மறுத்ததால் தாக்கினார்கள் என்றார்.

இந்த தகவல் அறிந்த அமமுக மாநகர செயலாளர் ராஜேஸ்வரன், பகுதி செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் விருத்தாசலம் உள்பட 50 பேர் மேற்கு போலீஸ் நிலையம் வந்து, தாக்கப்பட்ட அமமுக தொண்டர் சத்திய மூர்த்தியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பாமல், அவரை குற்றவாளி போல ஸ்டேஷனிலேயே வைத்திருப்பது ஏன், அவர் என்ன தவறு செய்தார் என்று கேட்டனர். இதனால் போலீசாருக்கும், அமமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரையும், அதிமுகவினரையும் கண்டித்து அமமுகவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் இன்று காலை 8.30 மணிக்கு சத்திய மூர்த்தியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனாலும் அமமுகவினர் அங்கு திரண்டு நின்று அதிமுகவுக்கு எதிராக கோஷம் போட்டனர்.

அப்போது 26வது வார்டு அதிமுக கிளை செயலாளர் மூர்த்தி அங்கு வந்து அமமுகவினர் கோஷம் போடுவதை செல்போனில் பதிவு செய்தார். இதைப்பார்த்த அமமுகவினர் ஆத்திரம் அடைந்து அவரை தாக்க பாய்ந்தனர். அப்போது போலீசார் வந்து அதிமுக கிளை செயலாளரை பாதுகாப்புடன் அழைத்து சென்று போலீஸ் நிலையத்திற்குள் அமர வைத்தனர். தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் போட்டனர். போலீசார் அவர்களை கலைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அதிமுகவினரை கைது செய்யும் வரை செல்லமாட்டோம் என்றதால், மேற்கு போலீஸ் நிலையத்தில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Assam ,volunteer ,party , Party, join forces, AIADMK, anarchy
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...