×

தேர்தல்களத்தை புரட்டிப்போடும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

கடந்த 1977 முதல் தனி தொகுதியாக இருந்த பொள்ளாச்சி மக்களவை தொகுதி, மறுசீரமைப்புக்கு பிறகு 2009ல் பொதுத்தொகுதியாக மாறியுள்ளது. இது, விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்அதிகம் நடக்கும் பகுதியாக உள்ளது. குறிப்பாக, தென்னை விவசாயம், தேங்காய் நார் தொழில் அதிகமாக நடக்கிறது. கேரள மாநில எல்லையை ஒட்டிய தொகுதி என்பதால் அதன் தாக்கம் உண்டு. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதி சற்று மாறுதல் அடைந்துள்ளது. கோவையின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியும் இணைந்துள்ளதால், கோவை பகுதியின் அரசியல், சமூக சூழல் கொண்ட தொகுதியாக இது மாறியுள்ளது.

இத்தொகுதியில், பொள்ளாச்சி,  கிணத்துக்கடவு, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, தொண்டாமுத்தூர், வால்பாறை  (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. இங்கு திராவிட கட்சிகளே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. திமுக, அதிமுகவை தொடர்ந்து, மதிமுகவும் இத்தொகுதியில் இரண்டுமுறை வென்றுள்ளது. அக்கட்சியின் சார்பில் டாக்டர் சி.கிருஷ்ணன் கடந்த 1998 மற்றும் 1999ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றிபெற்று 6 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தார்.

கடந்த தேர்தலில், அதிமுக வேட்பாளர் மகேந்திரன், 4,17,092 வாக்கு பெற்று வென்றார். பா.ஜ கூட்டணியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் 2,76,118    வாக்குகள் பெற்று, 2வது இடம் பிடித்தார். இத்தொகுதி எம்.பி.யாக இருக்கும் மகேந்திரனுக்கு, 2வது முறையாக சீட் வழங்கப்பட்டுள்ளது. திமுக சார்பில், பொறியாளர் சண்முகசுந்தரம், அமமுக சார்பில் முத்துக்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் மூகாம்பிகை, நாம் தமிழர் கட்சி சார்பில் சனுஜா ஆகியோர் களத்தில் உள்ளனர். இருப்பினும், திமுக, அதிமுகவுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

சமீப காலங்களில், ஊடக செய்திகளில், அதிக இடம் பிடித்தது பொள்ளாச்சி நகரம்தான்.  அதிர்வலைகளை உருவாக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவர் ‘பார்’ நாகராஜ் என்கிற அதிமுக பிரமுகர். மற்றவர்கள் இவரது நண்பர்கள். ‘பார்’ நாகராஜ், உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், இந்த பிரச்னையில் கட்சியின் மூத்த தலைவர்கள் நடந்து கொண்ட விதம் அதிமுக கூட்டணிக்கு எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இதுவரை நடந்துள்ள 16 மக்களவை தேர்தல்களில், இத்தொகுதியில் அதிமுக அதிகபட்சமாக ஏழு முறை வெற்றிபெற்றுள்ளது. திமுக நான்கு முறை வெற்றிபெற்றுள்ளது. இத்தொகுதியில், பாலியல் விவகாரம் வெடித்த காரணத்தால், அதிமுக கூட்டணி கட்சிகள் எதுவும் போட்டியிட நாட்டம் காட்டவில்லை. அதனால், வேறு வழியில்லாமல் அதிமுக நேரடியாக களம் இறங்கியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து போராட்ட களத்தில் இறங்கிய இளைஞர்களில், பெரும்பாலானவர்கள், முதல் முறையாக தற்போது நடைபெற உள்ள 2019 மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். சமூக ஊடகங்களும் தேர்தல் வெற்றியை முடிவு செய்யும் இந்தக்காலகட்டத்தில், இந்த இளைஞர்கள் பரவலாக சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், கடந்தமுறை போலவே இம்முறை அதிமுக வெற்றிவாகை சூட இயலாது என்ற நிலையே உள்ளது. அத்துடன், அமமுக வேட்பாளர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் போன்றவர்கள், அதிமுகவின் ஓட்டு வங்கியை பிரிக்கும் சக்திகளாக உள்ளனர்.

அதனால், திமுக வேட்பாளரின் வெற்றிவாய்ப்பு  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், அதிமுக மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். இதனால், பொள்ளாச்சி எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடைசியாக நடந்த இரு மக்களவை தேர்தல்களில், இத்தொகுதியை திமுக இழக்க, மும்முனை போட்டி ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 2009ல் பொள்ளாச்சியில் போட்டியிட்ட கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி 13.3% வாக்குகள் பெற்றார்.

இது, திமுகவின் தோல்விக்கு வழிவகுத்தது.  திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் சுமார் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சுகுமாரிடம் தோல்வி அடைந்தார். அப்போது, பெஸ்ட் ராமசாமி பெற்ற வாக்குகள் 1,02,834. ஒருவேளை கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடாமல் இருந்திருந்தால் அப்போது முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்.  2014ம் ஆண்டு நடந்த தேர்தலில், பதிவான வாக்குகளில் 41% பெற்று அதிமுக வென்றது. பா.ஜ கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன் 2ம் இடம் பிடித்தார். இப்போது அவர் திமுக கூட்டணியில் உள்ளார். தற்போது, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் ஏற்படுத்தியுள்ள கடும் அதிர்வு, பொள்ளாச்சி தேர்தல் களத்தை, நிச்சயம் புரட்டிப்போடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi Sexual Affair , Poll, pottachi, sex, affair
× RELATED கோவை டெண்டர், பொள்ளாச்சி பாலியல்...