இந்துதுவா கொள்கை, ஜாதி அரசியல் போன்ற காரணங்களால் பாஜ ஆட்சியை இழக்கப்போகிறது: பகுஜன் சமாஜ்கட்சி மாயாவதி பேச்சு

சென்னை: ‘‘இந்துதுவா கொள்கை, ஜாதி  அரசியல், சிறுபான்மையினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மீதான  தாக்குதல் போன்ற காரணங்களால் பாஜ அரசு ஆட்சியை இழக்கப்போகிறது’’ என பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி பேசினார். சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும்  வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமை வகித்தார். இதில், மாயாவதி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவை கடந்த 70 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ், பாஜக ஆட்சிக் காலத்தில் நாடு எவ்வித வளர்ச்சியையும் எட்டவில்லை. தவறான கொள்கை மற்றும் நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை இழந்தது.  இந்துதுவா கொள்கை, ஜாதி அரசியல், சிறுபான்மையினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் போன்ற காரணங்களால் பாஜ அரசு ஆட்சியை இழக்கப்போகிறது.

 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கருப்பு பணம் ஒழிப்பு, அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பாஜ வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றாமல், இந்தத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை மோடி ஏமாற்றப் பார்க்கிறார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் சரிசெய்ய மோடிக்கு நேரம் இருந்ததில்லை. தனது உள்கட்சிப் பிரச்னையைத் தீர்ப்பதிலேயே அவர் தனது கவனத்தைச் செலுத்தினார். கடந்த 5 ஆண்டுகளில் ஆடம்பரச் செலவுக்காக செலவிடப்பட்ட தொகையை நாட்டின் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குதற்கும் மோடி செலவிட்டிருக்கலாம். காங்கிரஸ், பாஜக ஆட்சிக் காலங்களில் ஊழல் நடைபெறவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், இருகட்சிகளின் ஆட்சிக்காலத்தில் தான் பாதுகாப்புத் துறை வரை ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கு போபர்ஸ், ரபேஃலும்தான் சாட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மும்மொழி கொள்கையில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி