×

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத விவகாரம் நேரில் ஆஜராகவில்லை என்றால் நடவடிக்கை: வருவாய்துறை செயலாளருக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து வருவாய் துறை செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஏப்ரல் 26ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று சென்னை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பூந்தமல்லியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பட்டா வழங்கும்படி திருவள்ளூர் கலெக்டருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  
 இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் என்றும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  மனுதாரர் அளித்த மனு நிலுவையில் உள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பணிநீக்கம் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து விளக்கம் அளிக்க  வருவாய்த்துறை செயலாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தனர்.

  வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், வருவாய்த்துறை செயலாளர் பணி நிமித்தமாக டெல்லி சென்றிருப்பதாகவும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தேர்தல் பணி காரணமாக வரமுடியவில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக துணைச் செயலாளர் மற்றும் தாசில்தார் ஆஜராகி இருப்பதாவும் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரித்தனர். மேலும், நீதிமன்றத்தில்  அரசு வக்கீல்களுக்கு வழக்கின் தன்மை குறித்து  தெரியவில்லை. ஒப்புக்கு சப்பாணியாக நீதிமன்றத்திற்கு வருகிறார்கள். நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் வராமல் இங்கு வந்து பொழுதுபோக்கு பூங்காவில் சிலை மனிதர்களை போன்று நிற்கிறார்கள். இதை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதிருப்தி தெரிவித்து விசாரணையை ஏப்ரல் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SEC , court, Revenue Secretary, HC
× RELATED தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி...