×

திமுக கூட்டணியின் வெற்றியை அதிகார அத்துமீறல் கரங்களால் பறிக்க நினைக்கும் ஆட்சியாளர்களிடம் இருந்து கவனமாக பாதுகாக்க வேண்டும்

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: உறுதியாகிவிட்ட திமுக கூட்டணியின் வெற்றியை அதிகார அத்துமீறல் கரங்களால் பறிக்க நினைக்கும் ஆட்சியாளர்கள், அவர்களின் கூட்டணியினரிடமிருந்தும் கவனமாக கண்ணென பாதுகாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறுகிற மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று வாக்காளர்கள் நினைப்பதன் அடையாளமாகத்தான் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்குப் பேராதரவு பெருகி வருகிறது. ஊடகங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புகளிலும் அது நன்றாகவே பிரதிபலிக்கிறது. நாம் கருத்துக் கணிப்புகளை மட்டுமே நம்பியிருப்பவர்களல்ல. களத்தில் இறங்கிக் கண்ணயராமல் செயல்படுபவர்கள். பாடுபட்டு வளர்த்த பயிரை, அறுவடை நேரம் வரை கவனமுடன் பாதுகாத்தால்தான், வெற்றி எனும் விளைச்சலைக் காண முடியும். சற்று அசந்தாலும் அது களவாடப்படக்கூடும். ஏனென்றால், வேலியே பயிரை மேய்கின்ற காலம் இது. 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, எங்கு சென்றாலும் மக்கள் பெருந்திரளாக வரவேற்றார்கள், வெற்றிவாய்ப்பு தெளிவாகத் தெரிந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகமும், அதற்குச் சாதகமாக தேர்தல் ஆணையம் பாராமுகமாக - பாரபட்சமாக செயல்பட்டதும், இத்தகைய சூழ்ச்சிகளையும் சூதுகளையும் அறியாமல் கழகத்தினர் சற்று அலட்சியமாக இருந்ததாலும், வெறும் 1.1 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியமைக்கும் வாய்ப்பினைக் கழகம் கை நழுவ விட்டது.

 திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு உருப்படியான திட்டங்கள் ஏதேனும் உண்டா? மத்திய - மாநில ஆட்சியாளர்களுக்கும் அவர்களுடைய கூட்டணியில் இருப்போருக்கும் இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது பற்றி பொதுமேடையிலேயே சூசகமாகப் பேசுகிறார்கள். உறுதியாகிவிட்ட கழகக் கூட்டணியின் வெற்றியை அதிகார அத்துமீறல் கரங்களால் பறிக்க நினைக்கும் ஆட்சியாளர்களிடமிருந்தும், அவர்களின் கூட்டணியினரிடமிருந்தும் கவனமாகக் கண்ணெனப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.கழக நிர்வாகிகளுக்கு இருக்கிறது.  வெற்றியைத் தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அதனைப் பெற்று, வங்கக் கடற்கரையில் நிரந்தர ஓய்வெடுக்கும் நம் தலைவர் கலைஞரின் காலடிகளில் காணிக்கையாக்கும் பொறுப்பு அந்த உயிர்நிகர் தலைவரின் உடன்பிறப்புகளான உங்களின் கைகளில்தான் இருக்கிறது. கூட்டணியின் வெற்றியை உறுதியாக நிலைநாட்டுவீர். இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,rulers ,DMK , DMK coalition, mk stalin,
× RELATED ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்...