×

விடாது துரத்தும் உச்ச நீதிமன்ற உத்தரவு ரபேல் துல்லிய தாக்குதலா? குறிதவறிய இலக்கா?

தப்பு தப்புதான்... இனி தப்பிக்க முடியாது..... காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.தாஸ்

ரபேல் ஊழல் என்பது மிகப் பெரிய மோசடி என்பதை மூத்த வழக்கறிஞர்கள் யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, சஞ்சய் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சுட்டி காட்டினர். இந்த டீல் மூலம் இந்திய நாட்டுக்கு பிரதமர் மோடி துரோகத்தை விளைவித்திருக்கிறார். ‘மேக் இன் இந்தியா’ என்று பேச்சுக்கு பேச்சு கூறும் பிரதமர் மோடி இன்றைக்கு 16 வகையான கம்பெனிக்கு ஒப்பந்தத்தை போட வைத்து அனில் அம்பானியை பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து போய் அறிமுகப்படுத்தி டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளார். அப்போது ராணுவ அமைச்சராக இருந்த மானோகர் பாரிக்கர் இந்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்ளாமல் நிராகரித்தார். இதனால் பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.  ஆரம்பத்தில் முகாந்திரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், தற்போது உரிய ஆதாரங்களை காட்டியதால் சீராய்வு மனுக்களை ஏற்றுக் கொண்டுள்ளது.  பிரதமர் மோடி நேரடியாக ஈடுபட்டு, அனில் அம்பானியுடன் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.

பொதுவாக 1986-87ல் வி.பி.சிங் போபர்ஸ் வழக்கில் வெறும் ரூ.64 கோடி ஊழல் என்று ராஜீவ்காந்தி மீது பழி சுமத்தினார். அது நாட்டில் ஒரு பெரிய பூகம்பமாக கிளம்பியது. ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை. அப்போது தான் எதிர்கட்சிகளின் சதி என்பது தெரியவந்தது. ஆனால் இன்று 30ஆயிரம் கோடி அளவில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டு விட்டது. ஆகையினால் நாட்டில் இது பெரிய மாற்றத்தையும், பூகம்பத்தையும் ஏற்படுத்தும். 30ஆயிரம் கோடிக்கான ஒப்பந்தத்தை அரசு பொது நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு கொடுக்காமல் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்த்த மோடி மீது தனிப்பட்ட முறையில் பெரிய ஊழல் வாதி என்பதை உச்சநீதிமன்றம் ஊர்ஜிதப்படுத்திவிட்டது. இதிலிருந்து மோடி எந்த வகையிலும் தப்பிக்க முடியாது. அவர் இந்திய மக்களுக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும். இந்த தேர்தலில் இந்த தீர்ப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

முதல் ரவுண்ட் எங்களுக்கு... 2வது ரவுண்ட் உங்களுக்கு..... தமிழக பாஜ ெபாருளார் எஸ்.ஆர்.சேகர்

உச்சநீதிமன்றத்தில் அரசு வைத்த கோரிக்கை. அதற்கு உச்சநீதிமன்றம் கொடுத்த பதில். அது தான் இந்த வழக்கு. இந்த வழக்கை விசாரிக்க கூடாது, ஆவணங்கள் திருடப்பட்டது என்று பாஜ தரப்பு சொல்கிறது. விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது அவ்வளவு தான்.  ஆரம்பத்திலே இந்த வழக்கை அட்மிட் பண்ணலாம் என்று தான் உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது அதற்கு மேல் இதில் ஒன்றுமே இல்லை. ஒருவகையில் சொன்னால் அரசியல் லாபமாக்குகிற யுக்தியை காங்கிரஸ் இதில் பயன்படுத்தும். உச்சநீதிமன்றம் முதல் ரவுண்டில், ரபேல் விமானங்களை அரசு வாங்கலாம், அரசுக்கு அதிகாரம் இருக்கிறது, இந்த ஒப்பந்த்தில் ஊழல் இல்லை என்று கூறியுள்ளது. இரண்டாவது ரவுண்டில் மத்திய அரசின் ஆவணங்கள், ஆட்சேபனை மனுக்களை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளது. இந்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்துக்குள் கொண்டு போகலாம் என்பது தான் தீர்ப்பு. பிரதமர் அழகாக இதற்கும் பதில் சொல்லியுள்ளார். அவர் கூறிய பதிலில், ‘உச்சநீதிமன்றம் சொன்னதற்கு பின்னால் இதை அரசியல் ஆக்குவது, ஒருதலை பட்சமாக பத்தரிகைகள் பேசுவது, உச்சநீதிமன்றம் சொன்ன விஷயங்களை பிரபலப்படுத்தாமல் மீண்டும் குற்றச்சாட்டுகளை பிரபலப்படுத்துவது என்பது பாஜ அரசுக்கு எதிராக முகாந்திரம் இல்லாமல் சொல்லப்படுகிற பொய் பிரச்சாரம். என்று கூறியிருக்கிறார்.

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டே பொய். முறைப்படி சென்றால் போர் விமானங்கள் வாங்க கால தாமதம் ஆகும் என்பதால் நேரடியாக அரசாங்கம் டூ அரசாங்கம் டீல் பண்ணுவதற்கு தான் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். அந்த நாட்டில் இருக்கக்கூடிய டசால்ட் நிறுவனத்தோடு நமக்கு நேரடி டீல் கிடையாது. அந்நாட்டு அரசுடன்  தான் டசால்ட் நிறுவனம் டீல் செய்துள்ளது. ஹெச்ஏஎல் நிறுவனத்தை சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் சொல்கிறது. பிரான்ஸ் ஒரு நாளில் செய்யக்கூடிய உற்பத்தியை அந்நிறுவனம் 4 நாளில் செய்கிறது. எனவே உற்பத்திக்கான கெப்பாசிட்டியை கூட்டுமாறு மத்திய அரசு கூறியது. ஆனால் அந்த நிறுவனம் செய்யவில்லை. அதனால் தான் அந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படவில்லை. இதை மறுத்து காங்கிரஸ் அரசு நிறுவனத்துக்கு தரவில்லை என்று கூப்பாடு போடுகிறது. அரசியல் ஆதாயம் தேடும் காங்கிரஸ் முயற்சிக்கு இந்த தீர்ப்பு எந்த வகையிலும் வழி கொடுக்காது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafael Preliminary Attack , Supreme Court, Rafael
× RELATED தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில்...