×

ரபேல் ஊழல் வழக்கில் சிறை..... மோடி முகத்தில் பயம் தெரிகிறது: ராகுல் காந்தி கிண்டல்

‘‘ரபேல் வழக்கில் சிறைக்கு செல்ல நேரிடுமோ என்ற பயம் மோடியின் முகத்தில் தெரிகிறது’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், ராய்கன்ஜில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டு பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ரபேல் ஊழல் பற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்படும். குற்றம் சுமத்தப்பட்டுள்ள மோடி உள்ளிட்ட அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். இதை நினைத்துதான், தற்போதைய பிரசார கூட்டங்களில் மோடியால் நன்றாக பேச முடியவில்லை.  ரபேல் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் புலனாய்வு விசாரணை நடத்தினால், சிறை செல்ல நேரிடுமோ என்று பயப்படுகிறார். அதனால், அவரது முகபாவனையில் ஒரு மாற்றம் தெரிகிறது. கடந்த காலத்தில் பாஜ.வுடன் கூட்டணி அமைத்திருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறார். நாட்டில் காங்கிரஸ் மட்டுமே பாஜ.வை எதிர்த்து முழு மூச்சாக செயல்படுகிறது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் `நியாய்’ திட்டத்துக்கு பணம் எங்கிருந்து வரும் என்று பாஜ.வினர் கேட்கின்றனர். பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானியின் பாக்கெட்டில் இருந்துதான் அதற்கான பணம் வரும். மோடி தனது தொழிலதிபர் நண்பர்கள் நிரவ் மோடி, அனில் அம்பானி ஆகியோருக்காக ஒரு  இந்தியாவையும், நேர்மையானவர்கள், ஏழை விவசாயிகளுக்காக ஒரு இந்தியாவையும் உருவாக்க முயற்சிக்கிறார். காங்கிரஸ் ஒருபோதும் இதை அனுமதிக்காது. மோடி வேண்டுமானால் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற திருடர்களுக்கு பயப்படலாம். நான் பயப்பட மாட்டேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

3 கேள்வியால் திணறி விடுவார்
பீகார் மாநிலம், கடிகாரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுகையில், ‘‘பிரதமர் மோடி என்னுடன் நேருக்கு நேர் விவாதித்தால், ரபேல் ஊழல், அனில் அம்பானி பற்றி நான் கேட்கும் மூன்று கேள்விகளால், மக்களை எதிர்கொள்ள முடியாமல் அவர் திணறி விடுவார். இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் 15 பேருடைய ரூ.3.5 லட்சம் கோடி வங்கி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார்.  வங்கியின் சாவிகளை தற்போது திருடர்கள் கையில் `சவுகிதார்’ கொடுத்திருக்கிறார். காங்கிரஸ் அதை மக்கள் கையில் ஒப்படைக்கும். மத்தியில் விவசாயிகளுக்காகதனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafael ,jail ,Modi ,kundal ,Rahul Gandhi , Rafael case, jail, Modi, Rahul Gandhi,
× RELATED ரஃபேல் விமானம் முதல் தேர்தல்...