கால்நடை தீவன ஊழல் வழக்கு : ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி:  கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு


ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரூ.900 கோடி கால்நடை தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். தற்போது, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சாமுண்டா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தனது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் கேட்டு அவர் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர், ஜாமீன் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன் கடந்த வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் லாலுவிற்கு ஜாமீன் வழங்குவது குறித்து சிபிஐ பதில் தாக்கல் செய்யும்படி கூறியிருந்தனர்.

சிபிஐ தரப்பில் லாலுவிற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு


இந்நிலையில் லாலுவின் ஜாமீன் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் லாலுவிற்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், ‘லாலு 8 மாதமாக கட்டண சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவரை சந்தித்தவர்களின் பட்டியல் உள்ளது. தற்போது மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால்,  ஜாமீன் வழங்கினால் அவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது’  என்று தெரிவிக்கப்பட்டது.

ஜாமீன் மனு தள்ளுபடி

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் மற்றும் சிபிஐ தரப்பு வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு  இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, லாலுவின் ஜாமீன் விஷயத்தில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி லாலுவின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lalu Prasad ,Rashtriya Janata Dal , Livestock fodder corruption, bail, petition, CBI, Lalu Prasad Yadav
× RELATED டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு: 3 பேரின்...