×

கென்னெசெட் பாராளுமன்ற தேர்தல்: இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு 5-வது முறையாக தேர்வு

ஜெருசலேம்: இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகு 5-வது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று  தேர்தல் நடைபெற்றது. இஸ்ரேல் பிரதமராக 4 முறை பதவி வகித்துள்ள பெஞ்சமின் நேதன்யாகு, இந்த முறையும் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக அரியணை ஏறுவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். இந்த தேர்தலில்  தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் ஒயிட் கட்சிக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சுமார் 63 லட்சம் வாக்காளர்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் (உள்ளூர் நேரப்படி) நேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 10  ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குச்சீட்டு முறையில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக முத்திரை பதிக்கும் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தையும்  எண்ணும் பணிகள் நேற்றிரவு பத்து மணியில் இருந்து தொடங்கியது. இதில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேட்டயன்யாஹூ கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வலதுசாரி கட்சியான லிகுட் கட்சி 37 இடங்களை கைப்பற்றியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மையவாத நீல வெள்ளை  கூட்டணியின் தலைவரான ஓய்வுபெற்ற ஜெனரல் பென்னி கான்ட்ஸ் கட்சி 36 இடங்களில் வென்றதாக செய்திகள் வந்துள்ளன. வலதுசாரி அமைப்புகள் ஆதரவுடன் கூட்டணி அரசை பெஞ்சமின் நேட்டன்யாஹூ அமைக்க  உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன் மூலம், பெஞ்சமின் நேட்டன்யாஹூ 5-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய நிலவரப்படி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பெஞ்சமின் நேதன்யாகு - பென்னி கான்ட்ஸ் இருவருமே சமபலத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. எனினும், 13 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த  காலத்தில் இஸ்ரேல் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க துணிச்சலான சில முடிவுகளை எடுத்தவர், அண்டைநாடான ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை திறம்பட எதிர்த்து சமாளித்தவர் என்ற வகையில் பெஞ்சமின்  நேதன்யாகு(69) மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புவதாக பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தின்போது பெஞ்சமின் நேதன்யாகு 3 ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் ஆட்சி தலைமையில் மாற்றம் தேவை என எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், ஒருவேளை  நேதன்யாகு ஐந்தாவது முறை பிரதமராக பதவி ஏற்றால் பிரான்ஸ் நாட்டில் உள்ளதுபோல் ஆட்சியின் தலைவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் நடவடிக்கை எடுக்க முடியாதவாறு இஸ்ரேல் பாராளுமன்றத்தில்  புதிய சட்டத்தை கொண்டுவந்து அவர் தப்பிக்க வாய்ப்புள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kenneset ,election ,Benjamin Netanyahu ,Israeli , Kennettet parliamentary election, Israeli Prime Minister Benjamin Netanyahu
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு