×

ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை : மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ரஃபேல் விவகாரத்தில் பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தொடர்ந்திருந்த மனு மீது  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.56 ஆயிரம் கோடியில் 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதலில் பெரியளவில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த முறைகேடு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் எம்எல்.சர்மா, வினீத் தாண்டா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுக்கள் தள்ளுபடி, சீராய்வு மனுத் தாக்கல்

இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதில் விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அதிரடியாகத் உத்தரவு   பிறப்பித்தது. ரஃபேல் ஒப்பந்தத்திற்கான செயல்முறைகளை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனவும், ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகளிலும் சந்தேகத்திற்கு இடமான அம்சங்கள் இல்லை எனவும்   உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கூறியது.

இதனைத் தொடர்ந்து ரஃபேல் முறைகேடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி முறையீடு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த்  பூஷண் ஆகியோர் இதற்கான சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆங்கில நாளிதழ் ஒன்றில் ரபேல் பேரம் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகின. அதே ஆவணங்கள், சீராய்வு மனுக்களுடனும் இணைக்கப்பட்டிருந்தன.  இந்த ஆவணங்கள், பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார். பின்னர், “ஆவணங்கள் திருடப்படவில்லை, அனுமதியின்றி நகல்  எடுக்கப்பட்டுள்ளது” என்று மறுப்பு தெரிவித்தார். இதனிடையே, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனுவில் தெரிவித்திருந்தார்.

மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம்

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கடந்த பிப்பரவர் 21-ம் தேதி உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் மறு சீராய்வு   மனுக்களை விசாரிக்க தனி அமர்வு உருவாக்க இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்..

மத்திய அரசு கோரிக்கை நிராகரிப்பு
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பு அளித்தனர். பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்துள்ளது. மறுஆய்வு மனு மீதான விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்படும், புதிய ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : investigation ,government ,Rafael ,Supreme Court , Rafael, Documents, Central Government, Request, Supreme Court
× RELATED தேர்தல் பத்திரங்கள் முறைகேடு...