×

கும்மிடிப்பூண்டியில் 175 கிலோ தங்க பிஸ்கட்கள் பறிமுதல் : போலீசார் அதிரடி

சென்னை: கும்மிடிபூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு வாகனத்தில் கொண்டுசென்ற 175 கிலோ தங்க பிஸ்கட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆந்திர தமிழக எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில், ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுத்துச்செல்வது போன்ற வாகனம், துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் அவ்வழியாக வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டுநரிடம் போலீசார் விசாரித்ததில், உள்ளே தங்கம் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவம் குறித்து கும்மிடிபூண்டி டி.எஸ்.பி கல்பனாத்திற்கு போலீசார் தகவல் கொடுக்கவே, அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். வாகனத்தை திறந்து பார்த்து சோதனை செய்ததில் வண்டியில் 175 கிலோ தங்க பிஸ்கட்கள் இருந்தது தெரியவந்தது. வாகனத்தில் இருந்தவர்களிடம் போலீசார் ஆவணங்களை வாங்கி சரிபார்த்தனர். அதில், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள தங்கம்,வெள்ளி கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனத்தின் குடோனில் இருந்து கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரனையில், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நடைபெறுவதும், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்க பிஸ்கட்களை கொள்முதல் செய்து அதை சென்னை, திருச்சி, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகள் மற்றும் நகைக்கடைகளுக்கு அனுப்புவதும் தெரியவந்தது.

மேலும், வாகனத்தில் இருந்த 175 கிலோ தங்கமானது சென்னை தி.நகரில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமான குடோனுக்கு கொண்டுசென்ற அங்கிருந்து ஐசிஐசிஐ வங்கிக்கு கொண்டுபோக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பின்னர், போலீசார் 175 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட துணை தேர்தல் அதிகாரி பார்வதி பார்வையிட்ட பின்னர் தங்க பிஸ்கட்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது சம்பந்தமாக வருமானவரித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து பின்னரே விடுவிக்கப்பார்கள் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுபோல், முகப்பேர் மேற்கு பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2.75 கோடி இருந்தது.தனியார் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப எடுத்து சென்றது தெரிந்தது. இவற்றை பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gold biscuit, gummidipoondi, police
× RELATED சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு...