×

பாஜ தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு ஆணையத்தை வரவேற்கிறேன்: ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: பாஜ தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு ஆணையம் என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் புதிதாக நடிக்க உள்ள படம் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நேற்று மும்பை செல்லும் முன் சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது: எனது அரசியல் நிலைப்பாடு பற்றி ஏற்கனவே  கூறிவிட்டேன். அதில் மாற்றம்  கிடையாது. பாஜவின் தேர்தல் அறிக்கை நேற்று  வெளிவந்துள்ளது. அதில் நதிகள்  இணைப்பிற்கு ஆணையம் அமைக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இது  வரவேற்கத்தக்கது.
நதிகள் இணைப்பு குறித்து நான் ஏற்கனவே பேசியுள்ளேன்.

இது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டம். அவர் பிரதமராக இருந்தபோது அவரிடம் இதுகுறித்து பேசியுள்ளேன். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பகீரத யோஜனா என பெயர் வைக்கலாம் என அவரிடம் கூறினேன். மக்கள் என்ன முடிவு எடுக்க போகின்றனர் என்பது தெரியவில்லை. மீண்டும் பாஜ ஆட்சி அமைந்தால், முதலில் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  நதிகள் இணைக்கப்பட்டால், பாதி பிரச்னை தீர்ந்துவிடும். வறுமை ஒழியும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். இது  தேர்தல் நேரம். இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை. லோக்சபா தேர்தலில் கமலுக்கு ஆதரவா என  கேட்கிறீர்கள். எனது நிலைப்பாட்டை ஏற்கனவே கூறியுள்ளேன். அதனை பெரிதுபடுத்தி,  அவருடனான  நட்பை கெடுத்துவிட வேண்டாம். இவ்வாறு  அவர் கூறினார்.

ரஜினி பேசியதை அரசியலாக்குவதா?

நதிகள் இணைப்பு திட்டத்தை பற்றி ஒரு இந்திய குடிமகனாக ரஜினிக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா என நடிகை குஷ்பு டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து நடிகை குஷ்பு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாஜவின் தேர்தல் அறிக்கையை பற்றி ரஜினிகாந்த் சார் பேசியதை வைத்து ஏன் ஊடகங்கள் இவ்வளவு சப்தம் எழுப்புகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நதிகள் இணைப்பு பற்றி ஒரு வார்த்தைப் பேசினார். அதனால் என்ன? ஒரு இந்திய குடிமகனாக ஒரு கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இல்லையா? அதை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rivals ,BJP ,interview ,Rajinikanth , BJP, election statement, rivers, link, interview
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...