×

ரபேல் விமான வழக்கில் திருடு போன ஆவணங்களை சாட்சியாக எடுக்க முடியுமா?: உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

புதுடெல்லி: ரபேல் விமான ஒப்பந்த வழக்கில் திருடு போன ஆவணங்களை சாட்சியாக எடுத்து கொள்ள முடியுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு எடுக்கிறது. பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், ஊழல் நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. மனுவை விசாரித்த நீதிமன்றம், ரபேல் ஒப்பந்த நடைமுறை சரியாக இருப்பதாக கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஆங்கில நாளிதழ் ஒன்றில் ரபேல் பேரம் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகின.

அதே ஆவணங்கள், சீராய்வு மனுக்களுடனும் இணைக்கப்பட்டிருந்தன. இந்த ஆவணங்கள், பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர், “ஆவணங்கள் திருடப்படவில்லை, அனுமதியின்றி நகல் எடுக்கப்பட்டுள்ளது” என்று மறுப்பு தெரிவித்தார். இதனிடையே, இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரஷாந்த் பூஷண் கோரினார். இந்நிலையில், நாளிதழில் வெளியான திருடு போன ஆவணத்தை இந்த வழக்கில் சாட்சியாக எடுத்து கொள்ள முடியுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு எடுக்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbery ,Rafael ,Supreme Court , robbery, Rafael case, Supreme Court,
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...