×

இரண்டு பேரும் சேர்ந்து நாட்டை குட்டிசுவராக்கி விட்டனர் மோடி, எடப்பாடியை விரட்ட வேண்டும்: நாகர்கோவிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வரும் 18ம் தேதி நடைபெறுகின்ற மக்களவை தேர்தல். மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தல். சர்வாதிகார ஆட்சி நடத்தும் மோடியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். மத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநில ஆட்சியாக இருந்தாலும் சரி நாட்டை குட்டிச்சுவராக்கினர், நாடு முழுவதும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஊழல் மிகுந்துள்ளது.

 கடந்த முறை மோடி மத்தியில் பா.ஜ ஆட்சிக்கு வந்தால் வானத்தை கிழிப்பேன் வைகுண்டத்தை காட்டுவேன் மணலை கயிறாக திரிப்பேன் என்ற அளவுக்கு வாக்குறுதிகளை வழங்கினார்.  கன்னியாகுமரியை உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாற்றுவேன். இலங்கை கடற்படையால் ஒரு மீனவர் கூட சாகமாட்டார் என்றார். 5 ஆண்டுகளாக எத்தனை மீனவர்கள் இறந்தனர். கைது செய்யப்பட மாட்டார்கள் என்றார், கைது தொடர்து நடக்கிறது, நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் உள்ளனர். குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையால் பிரச்னை உள்ளது. இரு மாநில பிரச்னை தீர்க்க கண்ாணிப்பு குழு அமைப்பு ஏற்படுத்தப்போகிறேன் என்று சொல்லி ஐந்தாண்டு ஆகிவிட்டது. அமைக்கப்பட்டுள்ளதா? அதற்கான சூழ்நிலை கூட உருவாகவில்லை. வாயில் வடை சுடுவதில் மோடி கில்லாடி. அந்த மாதிரி அறிவிப்புகளையும் உறுதிமொழிகளையும் வாரி வழங்கினார். அவர் வாயில் வடை சுடுகிறார். ஆனால் இங்கு வசந்தகுமாரை எதிர்த்து நிற்கிறார் பொன்னார்.

மோடியின் சிஷ்யனாக, வாயில் வடை சுடும் மோடியின் வேட்பாளராக நிற்கிறார். அவரும் கடந்த தேர்தலில் எண்ணற்ற வாக்குறுதிகளை வாரி வழங்கினார். என்ன சொன்னார், என்ன செய்தார் என்று பட்டியல் எடுத்தேன் 63 உறுதிமொழி கொடுத்துள்ளார். அவர் வாயில் வடை சுட்டார். இவர் அடையே சுட்டுள்ளார். அது வடை, இது அடை. ராகுல் காந்தி எப்படி பிரதமாக வர முடியும் என்று விமர்சிக்கின்றனர். ஏன் வர முடியாது? காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளாரே அது எல்லா தகுதியும் அவருக்கு உள்ளது என்பதற்கு ஆதாரம். இன்று ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜ தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு பயன்படும் திட்டம் ஏதாவது உள்ளதா? நீட் தேர்வு ரத்து செய்ய தகுதி தெம்பு உள்ளதா? கல்வி கடன் பொறுப்புக்கு வந்தவுடன் தள்ளுபடி அறிவித்துள்ளார்களா? எந்த அறிவிப்பும் இல்லை. இந்தநிலையில் அவர்களின் தேர்தல் அறிக்கை உள்ளது. ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் முன்னோட்டமாக பல அறிவிப்புகள் வெளியிட்டுள்ளோம்.

 ராகுல்காந்தி விவசாயிகள் கடன் தள்ளுபடியை அறிவித்தார். முடியுமா என மோடி கேட்டார். மத்திய பிரதேசத்தில் செய்யவில்லையா, ராஜஸ்தானில் செய்யவில்லையா, சட்டீஸ்கரில் 10 நாட்களில் ரத்து செய்வோம் என்றாரே, 2 நாளில் ரத்து செய்யவில்லையா, அதனை தான் திரும்பவும் சொல்லியுள்ளார். நாமும் நமது தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளோம். 1 கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். மகளிருக்கு 50 லட்சம் பேரை மக்கள் நல பணியாளர் என்று அறிவித்துள்ளோம். மத்திய மாநில அரசு பணி காலியிடங்கள் நிரப்பப்படும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.

மத்தியில் இருக்கும் மோடியின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி. தமிழகத்தில் உள்ள எடப்பாடி ஆட்சி உதவாக்கரை ஆட்சி. எதுக்கும் உதவாது. இரண்டு பேரும் சேர்ந்து நாட்டை குட்டிசுவராக்கி கொண்டுள்ளனர். மத்தியில் இருப்பது அத்வானிக்கு துரோகம் செய்த அரசு. மாநிலத்தில் இருப்பது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த அரசு, மத்தியில் பிரதமர் தன்னை மன்னராக நினைக்கிறார். இங்கு எடப்பாடி தன்னை கடவுளாக நினைக்கிறார். இப்படிப்பட்ட, மோடி, எடப்பாடி பேர்வழிகளை வீட்டை விட்டே நாட்டை விட்டே விரட்ட வேண்டும். இந்த தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்:

நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் மரணத்தில் கூட சித்திரவதை செய்த கூட்டம் எடப்பாடி கூட்டம். அண்ணாவுக்கு பக்கத்தில் 6 அடி இடம் தர மறுத்தது எடப்பாடி அரசு. எம்ஜிஆருக்கு அண்ணாவுக்கு பக்கத்தில் இடம் கொடுத்து, நினைவு மண்டபம் அமைத்தவர் கலைஞர். காமராஜருக்கு இடம் கொடுத்து நினைவிடம் உருவாக காரணமாக இருந்தவர். வள்ளுவர் கோட்டம் தந்த கலைஞருக்கு, தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்த கலைஞருக்கு, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோட்டை கட்டியவருக்கு. ெமாழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்த கலைஞருக்கு 6 அடி நிலம் இல்லை என்று எடப்பாடி கூட்டம் கூறியது.
அதற்கு அவருக்கு அருகதை இல்லையா? 6 லட்சம் அடி கூட தலைவருக்கு பொருந்தும்.

நீங்கள் ஆறு அடிக்கு கூட தகுதியில்லாத குள்ள நரி கூட்டம். நான் வெட்கத்தை விட்டு சொல்கிறேன் (கண் கலங்குகிறார்). நான், எனது அண்ணன் அழகிரி, மைத்துனர் செல்வம், நமது பொருளாளர் துரைமுருகன், டிஆர் பாலு, இப்படி ஒட்டுமொத்தமாக  புறப்பட்டோம். சிலர் தடுத்தார்கள், முதல்வரை நேரடியாக கேட்போம். எடப்பாடி அல்ல, முதல்வர் என்பதால் கேட்போம். நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை. மரியாதை பார்க்கவில்லை, கலைஞர் புகழ், ஆசையை நிறைவேற்ற புறப்பட்டோம். வீட்டிற்கு சென்றோம். பலமுறை வாதிட்டோம். கையை பிடித்து கெஞ்சினேன். அனுமதி கிடைத்ததா? கிடைக்கவில்லை. அண்ணா மறைந்த நேரத்தில் கலைஞர் இதயத்தை இரவலாக தந்துவிடு. கையோடு கால் அருகில் வைப்பேன் என்ற கலைஞருக்காக கேட்டேன். அவர் கொடுத்த உறுதிமொழி, வாக்குறுதியை காப்பாற்ற கெஞ்சினேன். நடக்கவில்ைல. என்ன செய்வது என்று தெரியாமல் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றோம். கலைஞருக்கு இடம் கொடுக்காதவர்களுக்கு இந்த தேர்தலில் வென்று பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,two ,MK Stalin ,country ,Nagarcoil ,DMK , Two, Kutthisuvar, Modi, Edattadi, MK Stalin, Anger
× RELATED உண்மையைச் சொன்னதால் இந்தியா கூட்டணி...