×

தேர்தல் களத்தில் மோதும் ஒலிம்பியன்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரூரல் மக்களவை தொகுதியில் பாஜ. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒலிம்பிக் வீரர்களை களம் இறக்கியுள்ளன. ஒருவர் பாஜ சிட்டிங் எம்பி. மற்றொருவர் சிட்டிங் எம்எல்ஏ, ஆனால், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர்: இவர் துப்பாக்கி சுடுதலில் டபுள் டிராப் பிரிவில் 2004 ஏதன்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர். 2002, 2006 காமல் வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம், 2004, 2006 உலக ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர்.  இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபிறகு, 2013 செப்டம்பர் 10ம் தேதி பாஜவில் சேர்ந்தார். புதியவர் என்றாலும், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில், ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் பாஜ சார்பில் நிறுத்தப்பட்டு, மோடி அலையால் வெற்றிக்கனி பறித்தார். விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். யூகங்களுக்கு ஏற்ப, 2வது முறையாக இவரையே களம் இறக்கியுள்ளது பாஜ.

இந்த முறையும் தனக்கே வெற்றி வசப்படும் என்ற நம்பிக்கையுடன், சாதனைகளை பட்டியலிட்டபடி தொகுதியை வலம் வர தொடங்கியுள்ளார் இந்த விளையாட்டு வீரர். ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ளவர் கிருஷ்ணா பூணியா. இவரும் ராஜ்யவர்த்தனை போலவே 2013ல்தான் அரசியலில் நுழைந்தார். வட்டு எறிதல் வீராங்கனையான இவர், 2006ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர். 2010ல் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இதுபோல், 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 6ம் இடம் பெற்றார். வட்டு எறிதல் போட்டியில் 64.76 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து தேசிய சாதனை படைத்த பெருமைக்கு உரியவர் இவர்.

இருவருமே ஒரே நேரத்தில் அரசியலில் நுழைந்தாலும், ராஜ்யவர்த்தன் பாஜவில் சேர்ந்ததுமே எம்பி சீட் பெற்று, அமைச்சராகவும் ஆகிவிட்டார். பூணியா ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2013ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால், கடந்த 2018ல் சடுல்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிட்டிங் எம்எல்ஏவான இவரைத்தான், எம்பி தேர்தலில் களம் இறக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.
எம்பி சீட் கிடைத்தது இவருக்கு பெரிய சர்ப்ரைஸ். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த விஷயத்தை சொன்னபோது இன்ப அதிர்ச்சிக்கே சென்று விட்டார்.

இதுகுறித்து பூணியா கூறுகையில், முதல்வர் அசோக் கெலாட் திங்கட்கிழமை இரவு என்னை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை கூறினார். காங்கிரஸ் என்னை மக்களவை தேர்தலில் களம் இறக்க விரும்புவதாக தெரிவித்தார். சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். இது கட்சி எனக்கு அளித்த சிறந்த வாய்ப்பு. விவசாயி மகளான எனக்கு, கிராமத்து மக்களின் பிரச்னைகள், கஷ்டங்கள் நன்கு தெரியும். விளையாட்டில் கூட, கிராம இளைஞர்கள் விளையாட்டைத்தான் நான் தேர்வு செய்தேன். நான் பெற்ற மெடல்கள், ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு வாங்கியவை அல்ல; வியர்வை சிந்தி பெற்றவை என்கிறார்.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. இங்கு ஜாதி வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் ஜாட் இனத்தவரின் 23 சதவீத வாக்குகள் பூணியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்யவர்த்தன் ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர். ராஜபுத்ர வாக்குகள் இந்த தொகுதியில் 10 சதவீதம் உள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.ஜோஷியை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் ராஜ்யவர்த்தன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Olympians ,field , Electoral field, collision, Olympian
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...