போட்டோ எடுப்பியா... போட்டோ எடுப்பியா? வில்லனாக மாறிய ஹீரோ

தன்னை போட்டோ எடுத்த தொண்டர் ஒருவரை நடிகர் பாலகிருஷ்ணா, சினிமாவில் வில்லன்களை ஹீரோ பின்னியெடுப்பதுபோல்,  அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. என்.டி.ராமராவ் மகன்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. இவரை முக்கிய பிரமுகர்கள் முதல் ரசிகர்கள், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் ஆகியோர் பாலய்யா என்று அன்போடு அழைப்பது வழக்கம். என்.டி.ராமராவ் மரணத்திற்குப பின் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக அனந்தப்பூர் மாவட்டம், இந்துப்புரம்  சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் இருந்து வருகிறார். தற்போது அதே தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எம்எல்ஏவாக போட்டியிடுகிறார்.

இவர், தான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில், ரயிலை கையில் தூக்குவது, ஓடும் பேருந்தை ஒரு கையால் தடுத்து நிறுத்தி தூக்கி வீசுவது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறார். இதுபோன்ற காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டவை என்று தெரியாத பாமர ரசிகர்கள் மெய்மறந்து பாலய்யாவின் வீரத்தை புகழ்வது வழக்கம். இந்நிலையில், ஆந்திராவின் சீப்புருபல்லியில் நேற்று முன்தினம் மாலை தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாலகிருஷ்ணா பிரசாரம் செய்தார். அப்போது வாகனத்தில் நின்று கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணாவை தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்றார்.

அவருடன் திடீரென்று வாக்குவாதத்தில் இறங்கிய பாலகிருஷ்ணா தொண்டரிடம் இருந்த கேமராவை அதிரடியாக பறிக்க முயன்று அடித்து உதைத்தார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளத்தில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர் ஏற்கனவே பலமுறை ரசிகர்களையும், தொண்டர்களையும் பின்னியெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. என்.டி.ராமாராவின் மகன் மட்டுமல்லாது தனது சம்மந்தியான பாலகிருஷ்ணாவை கண்டிக்க முடியாத நிலையில்  தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான முதல்வர் சந்திரபாபு நாயுடு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாலகிருஷ்ணாவின் இதுபோன்ற தொடர் செயல்கள் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் இடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்து. தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக போட்டியிடும் பலர் பாலகிருஷ்ணா தங்களுடைய தொகுதிக்கு பிரசாரம் செய்ய வராமல் இருப்பதே நல்லது என்று கருதும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பாதுகாப்பு படை அதிரடி புல்வாமா...