×

விமானத்தில் பறந்து வந்து மனைவியை கொன்ற ராணுவ வீரர்: கள்ளக்காதலியுடன் கைது; பரபரப்பு வாக்குமூலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்த ராணுவவீரர் மற்றும் கள்ளக்காதலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பி.திப்பனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(31). இவரது மனைவி கவுதமி(29). ஒரு மகன், மகள் உள்ளனர். ராஜேஷ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கவுதமி கடந்த 5ம் தேதி காலை வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தலையணையால் அவரது முகத்தை அமுக்கி யாரோ கொலை செய்திருந்தனர். இதுதொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் விசாரித்தனர். அதில் கவுதமியின் கணவர் ராஜேஷூக்கும், கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவம் நகரைச் சேர்ந்த கலைவாணி(30)க்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், இதை கவுதமி கண்டித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ராஜேஷ் பற்றி விசாரித்தனர். இதில் விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ராஜேசை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் அவர் பிடிபட்டார். அப்போது, அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கும், கலைவாணிக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதற்கு எனது மனைவி எதிர்ப்பு தெரிவித்து வந்தாள். இதுகுறித்து கலைவாணியிடம் கூறினேன். அதற்கு அவள் உனது மனைவி உயிருடன் இருக்கும் வரை நமது தொடர்பை தொடர முடியாது என்று கூறினாள். இதனால், நான் எனது மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டேன். இதற்காக ஜோத்பூரில் இருந்து விமானத்தில் பெங்களூரு வந்தேன். பிறகு அங்கிருந்து கடந்த 4ம் தேதி இரவு பி.திப்பனப்பள்ளியில் உள்ள வீட்டிற்கு வந்தேன்.

எனது குழந்தைகள் 2 பேரும் அவருடைய தாத்தா, பாட்டி வீட்டில் இருந்தனர். வீட்டில் இருந்த எனது மனைவியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர், அவள் தூங்கிய நேரத்தில் தலையணையால் முகத்தை  அமுக்கி கொலை செய்தேன். பின்னர், தாலி சங்கிலி, தோடு, நகைகளை எடுத்துக் கொண்டு இரவோடு, இரவாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றேன். அங்கு சேட்டு ஒருவரிடம் அந்த நகைகளை வைத்து பணம் வாங்கினேன். நகைக்காக இந்த கொலை நடந்ததாக திசை திருப்ப நாடகம் ஆடினேன். ஆனால், போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து ராணுவ வீரர் ராஜேஷ், கள்ளக்காதலி கலைவாணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : soldier , Flight, flew, wife, soldier, arrest, confession
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!