×

அப்போ இப்போ 8 வழிச்சாலை தேவைப்பட்டுச்சி... விவசாயிகள் கஷ்டம் புரிஞ்சிடுச்சி...

1 சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நில ஆர்ஜிதம் செய்யும் அறிவிப்பாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து இருக்கிறதே?. இது அதிமுகவுக்கு கிடைத்த பெரிய அடியாக பார்க்கப்படுகிறதே? சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு எதிரானதாகவோ அல்லது பாதகமானதோ கருத முடியாது. இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம். இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது மத்திய அரசாங்கம். இந்த திட்டத்தில் மாநில அரசின் பங்கு என்னவென்றால் அதற்கான நில ஆர்ஜித பணியை செய்து கொடுக்க வேண்டியது தான்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது, விவசாயிகளிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வந்த காரணத்தினாலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும், நில ஆர்ஜித பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசு எந்த முனைப்பு காட்டவில்லை. அவசரமும் காட்டவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்திருந்தது. நீதிமன்ற தீர்ப்பில் சில வழிகாட்டுதல்களை அரசுக்கு சொல்லியிருக்கிறார்கள். சில நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே, இது குறித்து தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார். எப்படி இருந்தாலும் மக்களுடைய எண்ணங்களுக்கு எதிராக ஜெயலலிதா அரசு ஒரு போதும் செயல்படாது.

2 நில ஆர்ஜிதம் செய்யும் அறிவிப்பாணை ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா?
இது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அதற்கு என்று சட்டத்துறை இருக்கிறது. சட்டத்துறையின்  அறிவுரையை பெற்று முதல்வர் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுப்பார்.

3 சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பதிலாக பறக்கும் சாலை அமைக்கலாமே என்றும், ஏற்கனவே 2 சாலை உள்ள நிலையில் 3வது புதிய சாலை ஏன் என்று பொறியியல் வல்லுனர்கள், விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனரே?
வல்லுனர்கள் பல வித மாற்று திட்டங்களை முன்வைத்தது உண்மை தான். அதிலே ஏற்கனவே இருக்கிற சாலைகளை விரிவுப்படுத்தினாலே போதும். புதிதாக 8 வழிச்சாலை ேதவையில்லை என்றும் சிலர் கூறினார்கள். சிலர் பறக்கும் சாலை போட்டால் நில ஆர்ஜிதம் குறையும் என்று சொன்னார்கள். இது போன்ற பல்வேறு மாற்று திட்டங்களை முன்வைத்தார்கள். பறக்கும் சாலை திட்டம் நிறைவேற்றினாலும் அதிலும் நில ஆர்ஜிதம் தேவைப்படுகிறது. அது போன்ற திட்டங்களுக்கு கூடுதல் செலவாகும். எனவே, இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டியுள்ளது. அதனால், தான் புதிய சாலை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ஜெயலலிதா அரசு ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்கும். இது குறித்து மத்திய அரசுக்கும் தமிழக அரசு ஆலோசனைகளை வழங்க வாய்ப்புள்ளது.

4 முதல்வர் எடப்பாடி
பழனிசாமி 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறினார். இந்த தீர்ப்புக்கு பிறகு தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
தீர்ப்பிற்கு முன்பு இந்த திட்டத்தின் தொடக்கத்தில் அதன் அவசியம் கருதி முதல்வர் சொன்ன வார்த்தைகள் அது. தீர்ப்பிற்கு பிறகு, விவசாயிகளின் ஆட்சேபனைக்கு பிறகு, தமிழக முதல்வர் விவசாயி என்ற அடிப்படையில், விவசாயிகளின் கஷ்ட, நஷ்டத்தில் உணர்ந்தவர் என்ற அடிப்படையில் யாருக்கும் பாதகம் இல்லாமல் அனைவரின் கருத்திற்கு மதிப்பளித்து நிச்சயமாக ஒரு நல்ல முடிவை எடுப்பார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : streams , Farmers suffer,difficulties
× RELATED பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி...