எஃப்-16 விமானத்தை பாகிஸ்தான் இழந்ததற்கான உறுதியான ஆதாரங்களை வெளியிட்டது இந்திய விமானப்படை

டெல்லி: பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான எஃப்-16 விமானம் தகர்க்கப்பட்டது உண்மைதான் என இந்திய விமானப்படை துணை மார்ஷர் ஆர்.ஜி.கே.கபூர் விளக்கம் அளித்துள்ளார். புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்களை  தீவிரவாதிகள் கொன்றதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த கடந்த 26ம் தேதி தாக்குதல் நடத்தின.  இதற்கு பதிலடியாக காஷ்மீரில் குண்டு வீச பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவின. இவற்றை இந்திய விமானப்படை விமானங்கள் விரட்டியடித்தன. இந்த சண்டையில் பாகிஸ்தான், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர்  விமானங்களை பயன்படுத்தியதாக இந்திய விமானப்படை கூறியது. அதற்கு ஆதாரமாக எஃப்-16 போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் அம்ராம் ஏவுகணையின் பாகங்களையும் இந்திய விமானப்படை ஆதாரமாக காட்டியது.

மேலும், ஒரு எஃப்-16 ரக போர் விமானத்தை விமானி அபினந்தன் சுட்டு வீழத்தினார் எனவும் இந்திய விமானப்படை கூறியது. ஆனால், எஃப்-16 போர் விமானங்களை பயன்படுத்தவே இல்லை என்றும், எஃப்-16 ரக விமானங்கள்  எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றும் பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை அமெரிக்கா வழங்கியபோது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஒப்பந்தம்  செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட விமானங்களை அமெரிக்கா எப்போது வேண்டுமானலும் சோதனை செய்யலாம்.

அதன்படி, எஃப்-16 ரக போர் விமானங்களை கணக்கெடுக்க வரும்படி அமெரிக்காவுக்கு, பாகிஸ்தான் சமீபத்தில் அழைப்பு விடுத்ததாகவும், இந்த சோதனையில் அமெரிக்கா வழங்கிய அனைத்து எஃப்-16 போர் விமானங்களையும்   பாகிஸ்தான் காட்டியதாகவும் அமெரிக்காவின் ‘தி பாரின் பாலிசி’ என்ற இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானில் எஃப்-16 போர் விமானம் எதுவும் மாயமாகவில்லை என அமெரிக்க இதழில் செய்தி  வெளியானதை தொடர்ந்து, இந்திய விமானப்படை கடந்த 5-ம் தேதி விடுத்த அறிக்கையில், ‘கடந்த பிப்ரவரி 27ம் தேதி, பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை இந்திய விமானப்படையின் மிக்-21 பைசன் ரக விமானம்,  நவுசேரா  பகுதியில் சுட்டு வீழ்த்தியது’ என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய விமானப்படை துணை மார்ஷர் ஆர்.ஜி.கே.கபூர், எஃப்-16 விமானத்தை பாகிஸ்தான் இழந்ததற்கு ஆதாரம் உள்ளதாக தெரிவித்தார். மேலும், எஃப்-16  விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ரேடார் பதிவுகளை வெளியிட்டார். இந்திய விமானப்படை அபிநந்தன் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் எஃப்-16 விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது என்றும்  சண்டையின் போது அபிநந்தன் சென்ற இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானமும் சிக்கியது என்றார். எஃப்-16 விமானத்தை பாகிஸ்தான் இழந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது என்றும்  தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இந்திய விமானப்படை தனது சிவில்...