×

8 வழிச்சாலை திட்டத்தை எப்படியாவது செயல்படுத்திவிட தமிழக அரசு அவசரம் காட்டியது தெளிவாகிறது : ஐகோர்ட் கண்டனம்

சென்னை : சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 8 வழிச்சாலை தீர்ப்பின் முழுவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தச் சாலை அமைக்கப்படுவதால் விலங்குகள் பாதிக்கப்படும் என்றும், மனிதர்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சாலைக்கு அனுமதி அளித்தால் அரியவகை பறவைகள், விலங்குகள் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே இரண்டு முக்கிய மலைவாசஸ்தலங்கள் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத கட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. அரியவகை மதிப்புமிக்க மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் நிலை ஏற்படும் மற்றும் நீர்நிலைகள், விலங்களுகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராயாமல் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

வனப்பகுதி வழியாக சாலை அமைத்தால் விலங்களுகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு மனிதர்களே பொறுப்பு என நீதிபதிகள் கூறியுள்ளனர். ரூ. 10,000 கோடி மக்கள் பணத்தில் சாலை அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். 8 வழிச்சாலை பணிக்கு சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல. சுற்றுச்சூழல் ஒப்புதல் இன்றி செயல்படுத்த அனுமதித்தால் அரசியல் சாசன விதிகளை மீறியதாகிவிடும் என நீதிபதி கூறியுள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த அவசரகதியில் மாநில அரசு செயல்பட்டுள்ளதால் அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த நீதிபதிகள், இது பசுமை வழிச்சாலையே இல்லை என்று கூறியுள்ளனர்.

திட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதாகவும், போராடுவோருக்கு எதிராக எழுதப்படாத தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறிய நீதிபதிகள், அமைதியாக போராடியோர் மீது காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் நல அரசு என்பது கண்மூடிக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. மக்கள் நல அரசு என்ற முறையில் விவசாயம் பொதுநலனை காக்க வேண்டும், திட்டங்களை செயல்படுத்தும் முன் சுற்றுச்சூழல் ஒப்புதல் எவ்வளவு முக்கியமோ அதுபோல மக்கள் கருத்தும் அவசியம். சாலை அமைக்கும் போது சுற்றுச்சூழல் ஆய்வு தேவை என்பது குதிரைக்கு முன் வண்டியை கட்டுவது போலாகும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

8 வழிச்சாலை திட்டத்தை ஆய்வு செய்த தனியார் நிறுவனம் அளித்த அறிக்கையில் ஏராளமான தவறுகள் உள்ளதால் அந்த அறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்கள் பெயருக்கு இரண்டு வாரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நில உரிமையாளர்களின் மறுவாழ்வு, மறு குடியமர்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் கூறவில்லை, திட்டத்தை எப்படியாவது செயல்படுத்திவிட மாநில அரசு அவசரம் காட்டியுள்ளது. இந்த நில அர்ஜித நடவடிக்கை சட்டவிரோதமானது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தவறுகள் இருந்தால் அதை எதிர்த்து வழக்குகள் தொடரலாம் என்றும், நிலம் கையகப்படுத்திய ஆதாரங்களை பார்க்கும்போது விதிகளின்படி நடைபெறவில்லை என தெரிகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil Nadu ,pavilions , 8 way road project, TN Government, High Court, Chennai-Salem
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...