×

நாடு கடத்த தடை விதிக்க முடியாது : விஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்!

லண்டன் : இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய விஜய் மல்லையாவின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, அந்த பணத்தைத் திருப்பி செலுத்த தவறியதாக அவர் மீது கடந்த 2016ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரை அதிகாரிகள் கைது செய்வதற்கு முன்னரே அவர் லண்டனுக்கு தப்பி சென்றார். இதையடுத்து விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. பிரிட்டன் சட்ட விதிகளின்படி மல்லையாவை நாடு கடத்துமாறு பிரிட்டன் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது. எனவே மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி அனுப்பும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜீத் ஜாவித் கையெழுத்திட்டார். எனினும் அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்தார். தன்னை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தால் நியாயம் கிடைக்காது என்றும், இந்திய சிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அவர் காரணங்கள் கூறியிருந்தார். இது குறித்து இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதையடுத்து மல்லையா வழக்கு தொடர்பான அறிக்கைகளை லண்டன் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் சமர்பித்து வருகின்றனர். இதையடுத்து மல்லையாவை இந்தியா அழைத்து வர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : London Court ,Vijay Mallya , Deportation, Vijay Mallya, Bank Debt Fraud, London Court
× RELATED வங்கி மோசடியாளர்களுடன் மோடி...