மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் நஷீத் அமோக வெற்றி : ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

மாலே : மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 87 இடங்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்திற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 80 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 67 இடங்களில் முகமது நஷீதின் கட்சி வெற்றி வாகை சூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட கால ராணுவ ஆட்சிக்கு பிறகு மாலத்தீவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் முறையாக ஜனநாயக முறையிலான அதிபர் தேர்தல் நடைபெற்றது.

அதில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்ற முகமது நஷீத், பொதுமக்கள் போராட்டம் மற்றும் ராணுவ நெருக்கடி காரணமாக கடந்த 2012ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2013ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அதிகராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாமீன், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் நஷீத்தை வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றினார். இதனையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2016ம் ஆண்டு பிரிட்டன் சென்ற நஷீதிற்கு அந்நாடு புகலிடம் அளித்தது. இதற்கிடையில் கடந்த ஆண்டு அங்கு மீண்டும் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அப்துல்லா யாமீன் 2வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து எம்டிபி கட்சியின் துணைத் தலைவர் முகமது சோலி களம் இறங்கினார். இதில் யாரும் எதிர்பாராதவிதமாக முகமது சோலி அமோக வெற்றிப்பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டதும் முகமது நஷீத் நாடு திரும்பினார். இந்நிலையில் மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் தலைமையிலான கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிபர் முகமது நஷீத், இந்த முடிவுகள் மாலத் தீவில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ராஜேந்திரபாலாஜி சொல்கிறார் உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லை