×

அந்தமான் தீவு பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவு

போர்ட்பிளேர் : அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மேலும் நிலநடுக்கத்தின் தாக்கம் அருகில் உள்ள தீவுகளிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 1ம் தேதி 4.7 ரிக்டர் முதல் 5.2 ரிக்டர் வரையில் 9 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இந்தோனேசியாவிலும் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்தோனேவியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அலோர் நகரில் கடல் மட்டத்தின் கீழ் 573 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தகவல் அளித்தது. சில வினாடிகளுக்கு மேல் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Earthquake ,Andaman Islands , Andaman Island, Earthquake, Richter Size, Indonesia
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்