×

8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது. இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் 277 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படவுள்ள இந்த 8 வழி சாலைக்கு சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட கோரி 5 மாவட்ட மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் வக்கீல்கள் ஏ.பி.சூரியப்பிரகாசம், வி.பாலு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளைத் தொடர்ந்தனர்.

பின்னர், 5 மாவட்ட விவசாயிகள், தருமபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த வழக்கு சுமார் 6 மாதங்களாக நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.    வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டத்திற்காக 5 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதித்து ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் வாதிடும்போது, இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார்.   தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர் திருமாறன் ஆஜராகி, விதிகளுக்கு உட்பட்டே நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது என்று வாதிட்டார். இதற்கிடையில், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிசிஐடி எஸ்.பி பிரவின் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை கடந்த டிசம்பர் 14ம் தேதி நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கிறோம். ஜனவரி 4ம் தேதிக்குள் மனுதாரர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூர்வ வாதங்களைத் தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Land acquisition ,Judge Action Judge , 8 Traffic, Chennai High Court, Highways
× RELATED பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு...