சோதனை ஓட்டத்துக்கு சென்ற கார் நடுரோட்டில் தீப்பிடித்தது

ஆவடி: ஆவடி அருகே, சோதனை ஓட்டத்துக்கு கொண்டு சென்ற கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி, காமராஜர் நகர், பட்டேல் தெருவில் ஆபிரகாம் (25) என்பவருக்கு சொந்தமான கார் சர்வீஸ் சென்டர் உள்ளது. இங்கு, அதே பகுதியை சேர்ந்த காமாட்சி ராஜா என்பவர், தனது காரை பராமரிப்பு பணிக்கு விட்டிருந்தார். பின்னர் அந்த காரை அம்பத்தூரில் உள்ள மற்றொரு தனியார் சர்வீஸ் சென்டரில் பழுது நீக்க ஆபிரகாம் விட்டிருந்தார். அங்கு, சீரமைப்பு பணி முடிந்ததும், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த காரை சோதனை ஓட்டமாக அம்பத்தூரில் இருந்து புறவழிச்சாலை வழியாக ஆவடி வரை ஆபிரகாம் ஓட்டிவந்தார்.

ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை அய்யன்குளம் பகுதியில் சென்றபோது, காரின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. திடுக்கிட்ட ஆபிரகாம், உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் இன்ஜின் பகுதி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்து ஆவடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தந்தை படுகாயம் வாகன விபத்தில் புது மாப்பிள்ளை பலி