×

ஜில்லு ஏசி... சொகுசு மெத்த்த... புல்லட் புரூப்பூ... கலக்குறாரு ‘பஸ் நாயக்’

கர்ர்ரக்... கர்ர்ரக்... என்று வட்ட வடிவ டயலை சுற்றிச் சுற்றி போன் செய்த காலம் மலையேறி... தெள்ளத்தெளிவாக முகம் பார்த்து பேசுகிற ஆன்ட்ராய்ட் காலம் வந்துவிட்டது. இன்னமும் அதே பழைய பஞ்சாங்க பாணியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகுமா...? தேர்தல் பிரசாரங்களும் கூட அதன் நவீன உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. கடந்த காலங்களில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பழைய கார்களிலும், அதற்கப்புறம் வேன்களிலும் தொகுதி, தொகுதியாகச் சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்வார். இந்த தேர்தலில் ஹைடெக் மாடலுக்கு மாறிவிட்டார். தேர்தல் பிரசாரத்துக்கு என்று தனியாக நவீன மாடல் பஸ் ஒன்றை அவரது பிஜேடி (பிஜூ ஜனதாதளம்) கட்சி தயார் செய்திருக்கிறது. செம என்றால்... நிஜமாகவே செம. நவீன் பிரசாரத்துக்காக தயாராகி இருக்கும் அதிநவீன அல்ட்ரா மாடல் பிரசார பஸ்சின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். இல்லாத வசதிகளே இல்லையாம். 16 டன் ஏசி வசதி, ஹைட்ராலிக் லிப்ட், படுக்கை அறை, அங்கு படு சொகுசான கட்டில் - மெத்தை, விஸ்தீரமான, உட்கார்ந்தால் புதைந்து கொள்கிற குஷன் சோபா, ஆடியோ விஷூவல் செட், குளியலறை, ரெஸ்ட் ரூம், பெரிய கான்ப்ரன்ஸ் ஹால், சாட்டிலைட் தொடர்பு வசதிகள், அதிவேக இன்டர்நெட் இணைப்பு... பட்டியல் இன்னும் மிக நீளமானது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், படு ஆடம்பர சொகுசு ஓட்டல் அறையை மிஞ்சுகிற வசதி.

உள்ளே அமர்ந்து செல்லும் போது, பயணம் செல்கிற உணர்வு துளியும் இருக்காதாம். பிரசாரம் செய்யவேண்டிய இடத்தில் பஸ்சை நிறுத்தியதும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நாற்காலியில் ஏறி அமர்ந்து கொண்டால் ஓகே. பஸ்சின் மேற்கூரை திறந்து வழிவிடும். ஹைட்ராலிக் லிப்ட் மூலம், நாற்காலி அப்படியே உயர்ந்து, பஸ்சின் டாப்புக்கு போகும். அங்கிருந்தவாறே.... ‘வாக்காளப் பெருமக்களே...’ என்று வீர உரை ஆற்றவேண்டியதுதான் பாக்கி. பிரசாரம் ஒரு மணிநேரம் நீடித்தாலும் கூட, துளி வெயில் நவீன் மேலே படாது. காரணம், பஸ்சின் டாப்பில், நவீன் அமர்ந்து பேசுகிற நாற்காலி உள்ள இடம் சன்-ரூஃப் ெசய்யப்பட்டிருக்கும். ஆப்கனில் இருந்து அல்கொய்தா காரர்கள் வந்தால் கூட அஞ்சத் தேவையில்லை. காரணம், பஸ் முழுக்க முழுக்க புல்லட் புரூஃப். பிஜேபி காரர்களிடம் இருந்து இந்த பஸ் பயணத்துக்கு விமர்சனம் எழுந்திருக்கிறது. ‘அவர் பட்நாயக் இல்லை... பஸ்நாயக்’ என்று ரிதமிக்காக கிண்டலடிக்கிறார்கள். ‘சரி. இது ஆடம்பரம் இல்லையா...?’ என்று கேட்டால் இடதும், வலதுமாக தலையசைத்து மறுக்கிறார்கள் பிஜேடி கட்சி நிர்வாகிகள். ‘‘பிஜேபி கட்சிக்காரங்களும்தான சார் சொகுசு வாகனங்களில் வந்து பிரசாரம் பண்ணுறாங்க? ஒடிசால நாலு கட்டமாக ஏப்ரல் 29ம் தேதி வரைக்கும் தேர்தல் நடக்குது. மாநிலத்துல இருக்கிற 147 சட்டசபை தொகுதிக்கும் எங்க தலை சுற்றுப்பயணம் போகவேணாமா? பேசுறவங்க பேசிகிட்டுத்தான் இருப்பாங்க. அதெல்லாம் கேட்டுகிட்டு இருந்தா வேலை நடக்குமா சார்...?’’ என்கிறார்கள். சர்தான்!

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jillu AC , AC , bullet proof, luxury 'bus Naik'
× RELATED திரைமறைவிலிருந்து தமிழர் ஆட்சி...