×

இதைவிட சிறந்த அறிமுகம் இருக்க முடியாது...: அல்ஜாரி ஜோசப் பெருமிதம்

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் இளம் வேகம் அல்ஜாரி ஜோசப் (22 வயது) அறிமுகமானார். 20  ஓவரில் 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 17.4 ஓவரில் 96 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே அதிரடி வீரர் டேவிட் வார்னரை வெளியேற்றிய ஜோசப், அந்த ஓவரை விக்கெட் மெய்டனாக ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் அசத்தினார். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய அவர்  3.4 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 12 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐபிஎல் தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்றது குறித்து அல்ஜாரி ஜோசப் கூறுகையில்,‘நம்பவே முடியவில்லை. இது எனக்கு மிகச் சிறப்பான தொடக்கம். இதைவிட சிறப்பான அறிமுகம்  இருக்க முடியாது. இதை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன். முதல் போட்டி என்பதால், முழு திறமையையும் வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது.  ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டேன். தொடக்கத்தில் சில விக்கெட்டை வீழ்த்தினால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதை உணர்ந்திருந்தோம். மும்பை அணி கோப்பையை  வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்றார்.ஜோசப் 12 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தியது, ஐபிஎல் வரலாற்றிலேயே அறிமுக பந்துவீச்சாளரின் சிறந்த செயல்பாடாக அமைந்தது. முன்னதாக 2008ல் நடந்த தொடக்க சீசனில் சோகைல் தன்வீர் 14 ரன்னுக்கு 6 விக்கெட்  வீழ்த்தியிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : introduction ,Aljari Joseph , Better , Introduction ,Aljari Joseph ,pride
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...