×

ரபாடா அபார பந்துவீச்சு ராயல் சேலஞ்சர்சுக்கு தொடர்ச்சியாக 6வது தோல்வி: கோஹ்லிக்கு கடும் நெருக்கடி

பெங்களூரு: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி அணி நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 6வது தோல்வியைத் தழுவியது.எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் தொடக்க வீரர்களாக பார்திவ் பட்டேல், கேப்டன் கோஹ்லி களமிறங்கினர். பார்திவ் 9 ரன் மட்டுமே எடுத்து மோரிஸ் பந்துவீச்சில் லாமிகேன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் 17  ரன், ஸ்டாய்னிஸ் 15 ரன் எடுத்து வெளியேற, ஆர்சிபி அணி 66 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.கோஹ்லி ஒரு முனையில் பொறுப்புடன் நிலைத்து நின்று விளையாட, மொயீன் அலி அதிரடியாக விளையாடி பெங்களூர் அணிக்கு நம்பிக்கை தந்தார். அவர் 32 ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி, லாமிகேன்  பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ரன் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் கோஹ்லியும் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 41 ரன் எடுத்து (33 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ரபாடா வேகத்தில் ஷ்ரேயாஸ் வசம்  பிடிபட்டார். அக்‌ஷ்தீப் நாத் 19, நேகி 0, சிராஜ் 1 ரன்னில் அணிவகுத்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது. சவுத்தீ 9 ரன், சாஹல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி  பந்துவீச்சில் ரபாடா 4, மோரிஸ் 2, அக்சர் பட்டேல், லாமிகேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. டெல்லி அணி தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்தித்திருந்ததால், அந்த அணியும் கூடுதல் நெருக்கடியுடன் தான்  இந்த போட்டியில் விளையாடியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். பார்மில் இல்லாத தவான், சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் நடையைக் கட்டினார்.அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் பார்திவ் நழுவவிட்டார். சவுத்தீ வீசிய 4வது ஓவரின் முதல் 4 பந்துகளையும் பிரித்வி ஷா பவுண்டரிக்கு விரட்டி  அசத்தினார். இந்த ஓவரில் மட்டும் 30 ரன் கிடைத்தது. லைப் கிடைத்த மகிழ்ச்சியில் ஷ்ரேயாஸ் அய்யரும் அதிரடியில் இறங்க, டெல்லி அணி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.ஷா - ஷ்ரேயாஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தது. பிரித்வி ஷா 28 ரன் (22 பந்து, 5 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய ஷ்ரேயாஸ் அரை சதம் அடித்தார். இங்ராம் 22 ரன் (21 பந்து, 2  பவுண்டரி, 1 சிக்சர்), ஷ்ரேயாஸ் 67 ரன் (50 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிறிஸ் மோரிஸ் 0, ரிஷப் பன்ட் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

3 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்திருந்த  டெல்லி கேப்பிடல்ஸ், 147/6 என சரிவை சந்தித்தாலும், அக்சர் பட்டேல் - திவாதியா இணை பதற்றமின்றி விளையாடி வெற்றியை வசப்படுத்தியது.டெல்லி அணி 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து வென்றது. அக்சர் 4 ரன், திவாதியா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார். கோஹ்லி தலைமையிலான ஆர்சிபி  அணி, நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 6வது தோல்வியை சந்தித்தது. திறமையான வீரர்கள் பலர் இருந்தும் புள்ளிப் பட்டியலில் கணக்கை தொடங்க முடியாதது அந்த அணியின் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : defeat ,bowling bowlers ,Rawada ,Royal Challengers ,crash ,Kohli , Rabatah's, great bowling, Royal Challengers, Kohli , crisis
× RELATED பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது;...