×

வாக்காளர் அட்டை இல்லாமல் ஓட்டுப்போட பூத் சிலிப் மட்டும் போதாது: தேர்தல் ஆணையம் கறார்

சேலம்: வரும் நாடாளுமன்ற தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் பூத் சிலிப் மட்டும் கொண்டு வந்தால் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தமிழக நாடாளுமன்ற மற்றும் காலியாக உள்ள 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல், வரும் 18ம் தேதி நடக்கிறது. அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே நடப்பு தேர்தலில், வாக்காளர் அட்டை இல்லாமல், ஆணையம் வழங்கும் வாக்காளர் சீட்டை (பூத் சிலிப்) மட்டும் கொண்டு சென்றால் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி ரோகிணி கூறுகையில், “அனைத்து வாக்காளர்களுக்கும் அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) விரைவில் வழங்கப்படவுள்ளது.  ஓட்டுப்போட வரும்போது, இந்த பூத் சிலிப்புடன் வாக்காளர் அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டும். அல்லது தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்லலாம். அதேசமயம் பூத் சிலிப் மட்டும் வைத்துள்ளவர்கள் வாக்களிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே, வாக்காளர் அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்களை கொண்டு வந்து வாக்களிக்கலாம்” என்றார்.

12 வகை ஆவணங்கள்:  
1. வாக்காளர் அடையாள அட்டை.
2. பாஸ்போர்ட்.
3. லைசென்ஸ்.
4. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணிபுரிவதற்கான அடையாள அட்டை.
5. புகைப்படத்துடன் வங்கி அல்லது அஞ்சலகங்களால் வழங்கப்பட்டவை.
6. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை.
7. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு.
8. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை.
9. மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை.
10. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
11. நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை
12. ஆதார் அட்டை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Booth Chile ,Election Commission , Voter Card, Vote, Booth Chilib, Election Commission
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...