×

தேர்தல் சதி, ஆபாச படம் வெளியீடு, ஆசிட் வீச்சு முயற்சி ராம்பூரில் அசம்கானா? நடிகை ஜெயபிரதாவா?: உத்தரபிரதேச தேர்தலில் பரபரப்பு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல நடிகை ஜெயபிரதா நிருபர்களிடம் கூறியதாவது:ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து, மாநிலங்களவை எம்பியாக பணியாற்றினேன். தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவின் வசம் வந்த பிறகு என்னை மிகவும் அவமதித்தனர். அப்போது அமர்சிங், என்னை சமாஜ்வாதி கட்சியில் சேர்த்துவிட்டார். கடந்த 2004ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால், அங்கு வெற்றி பெற்றேன். கட்சியில் செல்வாக்கு உயர்ந்ததால், அக்கட்சியில் இருந்த அசம்கானுக்கு பிடிக்கவில்லை. மீண்டும் 2009ல் ராம்பூர் தொகுதியில் என்னை நிறுத்திய போது, என்னை தோற்கடிக்க அசம்கான் பல சதிகளை செய்தாலும், நானே வெற்றி பெற்றேன். அகிலேஷ் யாதவுடன் அமர்சிங்குக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் என்னையும், அமர்சிங்கையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தனர். ஒரு கட்டத்தில் அசம்கான் என்மீது ஆசிட் ஊற்ற முயன்றார். மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து என்னை அசிங்கப்படுத்தினார்.

தொடர்ந்து 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி சார்பில் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தேன். அதன்பிறகு அரசியலை விட்டு விலகி இருந்தேன். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த நான், ராம்பூர் தொகுதி மக்கள் என்மீது காட்டிய அன்பால், அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை விடவில்லை.  இதற்கிடையே, ராம்பூர் தொகுதியில் போட்டியிட எனக்கு பாஜ தலைமை வாய்ப்பு அளித்தது. அதனால் பாஜ சார்பில் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் அசம்கான் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. ராம்பூர் தொகுதி மக்கள் என்னை 3வது முறையாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : release ,Jayaprada ,Rampur , Election conspiracy, porn film release, acid stroke, rampur, anamkam, actress jayapratha, Uttar Pradesh election
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி