கொல்கத்தா: மத்திய அரசின் திட்டங்கள் கொல்கத்தா மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார் என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. முதல் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி நடக்கிறது. மே 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கூச் பெகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார் என குற்றம்சாட்டினார்.மேலும், பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் மம்தா ராணுவ நடவடிக்கைக்கு எதிராக இருக்கிறார். நமது தாயகத்தை மம்தா மதிக்க தவறிவிட்டார். எல்லையில் ஊடுருவல்காரர்களுக்கு மம்தா துணைபோகிறார். இந்தியாவை துண்டாடும் முயற்சிக்கு மம்தா துணைபோகிறார் என்றார். தற்போது பா.ஜ.,வுக்கு ஆதரவான அலையால் மம்தாவின் தூக்கம் பறிபோய் விட்டது. சாரதா சிட்பண்ட் ஊழல் நடந்துள்ளது. இதற்கு மம்தா துணைபோகிறார். இந்த மாநிலத்தில் ஏற்பட்ட ஊழல்கள் குறித்து இம்மக்கள் அறிவர். இந்த மாநிலத்தை காவலாளியான நான் காப்பேன் என தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி