×

நூறு வயதிலும் நோய் தீர்க்கும் ஏழைகளின் ‘கேப்டன் டாக்டர்’

சேலம்: உயிர்காக்கும் உன்னத துறையான மருத்துவத்துறை காலத்திற்கு ஏற்ப பல நவீன வசதிகளை கொண்டுள்ளது. ஆனால், எந்தவித வசதிகளும் இல்லாத, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக எம்பிபிஎஸ் படித்த சேலம் மருத்துவர் ஒருவர் தனது 100வது வயதில், இன்னமும் சேவை புரிந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் வசித்து வந்த ஜெகநாதன்பிள்ளை-பாப்பாத்தி அம்மாள் தம்பதிக்கு 3 மகள், 5 மகன் என மொத்தம் 8 பிள்ளைகள். இதில், மூன்றாவதாக 1920ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கலன்று பிறந்தவர் அருணகிரி. 1943ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்த இவர், உடனடியாக பர்மாவில் நடந்த இரண்டாம் உலகப் போருக்கு சென்று தனது மருத்துவ சேவையை தொடங்கினார். அங்கு போரில் காயமடைந்தவர்களுக்கு தேவையான பல்வேறு மருத்துவ உதவிகளை செய்தார். பின்னர், 1946ம் ஆண்டில் நாடு திரும்பிய இவர், சேலம் அரிசிப்பாளையம் தம்மண்ணன் ரோட்டில் அவரது பெயரிலேயே சிறிய கிளினிக் ஒன்றை ஆரம்பித்தார்.  

2ம் உலகப்போரில் பணிபுரிந்ததால், டாக்டர் பட்டத்துடன், கேப்டன் என்ற பட்டமும்  அருணகிரியுடன் சேர்ந்துவிட்டது.  ஏழை, எளிய பொதுமக்களுக்காக கிளினிக் தொடங்கிய இவர், ₹3 மட்டும் கட்டணமாக பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வந்தார். குதிரை வண்டியிலேயே கிராமங்களுக்குச் சென்று, ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி உள்ளார். இவரின் சேவையும்,  கைராசியும் சேலம் மாவட்டம் முழுவதும் இவரை அடையாளப்படுத்தியது. இதன் காரணமாக, அந்த இடத்திற்கே டாக்டர் அருணகிரி பஸ் ஸ்டாப் என்ற பெயர் கிடைத்தது. அதனை தொடர்ந்து, செவ்வாய்பேட்டை, ஓமலூரிலும் கிளினிக்கை தொடங்கி இலவசமாகவும், சலுகை விலையிலும் பல்வேறு மருத்துவ சேவைகளை புரிந்துள்ளார். அதிலும் திருப்தியடையாத இவர், கடந்த 1950ம் ஆண்டு முதல் 1955ம் ஆண்டு வரை சேலம் அரசு மருத்துவமனையில் பகுதிநேரமாக மருத்துவம் பார்த்தார். இதற்காக எந்தவித சம்பளமும் பெறவில்லை என்பது அவரது சேவை மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

கடந்த ஜனவரியுடன் தனது 99 வயதை நிறைவு செய்த மருத்துவர் அருணகிரி, 100வது வயதிலும் அதே துடிப்புடன் மருத்துவ சேவை புரிந்து வருகிறார்.  தனது மருத்துவ அனுபவம் குறித்து அவர் கூறுகையில், ‘‘ஏழை, எளிய மக்களுக்கு எந்தவொரு காரணத்தாலும், மருத்துவம் மறுக்கப்பட கூடாது. இதனை அடிப்படையாக வைத்தே இதுவரை சேவை புரிந்து வருகிறேன். எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாத ஆரம்ப காலங்களில், மக்களின் நம்பிக்ைகயே எனது முழு ஈடுபாட்டிற்கு காரணமாக இருந்தது. கொள்ளை நோய் பரவிய சமயங்களில், என்னை நம்பி வந்த கட்டுக்கடங்காத கூட்டத்திற்கும் மருத்துவம் பார்த்தது இன்னமும் நினைவில் வந்து செல்கிறது. , என்னால் முடியும் வரை மக்களுக்கு சேவை புரிவேன்’’ என்றார்.

தமிழக அளவில் பதிவில் மூத்தவர்
தமிழகத்தில் மருத்துவராக பணிபுரிய, மாநில மருத்துவ கவுன்சிலிலும் பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரை பதிவு செய்துள்ள மருத்துவர்கள், தங்களது பதிவை புதுப்பித்துக்கொள்ள சமீபத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. டாக்டர் அருணகிரி தனது பதிவை புதிப்பித்த போது, கவுன்சிலை சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது, தமிழகத்தில் அலோபதி மருத்துவத்தில் பதிவு பெற்ற மருத்துவர்களில், மூத்தவர் அருணகிரி என்பதே அவர்களின் ஆச்சர்யத்திற்கு காரணம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Doctor of Captivity , Hundred years old, illness, Captain Doctor '
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...