×

பயம் அறியாத இளங்கன்று ரிஸ்க்கில் ரஸ்க் சாப்பிட துடிக்கும் லோகேஷ்: ஆந்திர அரசியலில் அசத்தல் டிரெண்ட்

ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடக்கிறது. இதில், இம்மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், முதல் முறையாக களம் காண்கிறார். இவர், தெலுங்கு தேசம் கட்சி கடந்த 30 ஆண்டுகளாக வெற்றியே பெறாத மங்களகிரி சட்டப்பேரவை தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டிடுகிறார். தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கும் நிலையில், லோகேஷ் எடுத்துள்ள இந்த துணிச்சலான முடிவு, அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களகிரி தொகுதி, குண்டூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மிகவும் பலம் வாய்ந்தது.

நெசவாளர்கள் அதிகம் நிறைந்த இந்த தொகுதியில், 1985ம் ஆண்டுக்கு பிறகு நடந்த எந்த தேர்தலிலும் தெலுங்கு தேசம் வென்றது கிடையாது. இதை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிடும். இருப்பினும், சந்திரபாபு நாயுடு அமல்படுத்தியுள்ள பசுப்பு கும்குமா திட்டம் (சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 10,000, ஸ்மார்ட்போன் வழங்குவது) ஏழை, எளியோருக்கான என்டிஆர் பென்சன் திட்டம் போன்றவை, 36 வயது லோகேசுக்கு கைகொடுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

‘ரிஸ்க்கான தொகுதியில் போட்டியிடுவது ஏன்?’ என லோகேசிடம் கேட்டபோது, ‘‘அரசியலில் ஒரு டிரண்ட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே மங்களகிரி தொகுதியை தேர்வு செய்தேன். 30 ஆண்டுகளாக எங்கள் கட்சி வெற்றி பெறாத இத்தொகுதியில், ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல் வெற்றி பெற்று அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துவேன்’’ என்கிறது பயமறியாத இந்த இளம் கன்று.
இத்தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ.வான அல்லா ராமகிருஷ்ண ரெட்டி, இங்கு மிகவும் பிரபலமானவர். ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்தவர். இவர் 2014 தேர்தலில் தெலுங்கு தேசம் வேட்பாளர் கான்ஜி சிரஞ்சீவியை வெறும் 12 வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்கடிக்க முடிந்தது. எனவே, கடந்த முறை வெற்றியின் விளிம்பு வரை தெலுங்கு தேசம் இங்கு வந்ததே, லோகேஷ் இங்கு போட்டியிடும் தைரியத்துக்கு காரணம் என்கிறது கட்சி வட்டாரம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fear unknown, Lokesh, Andhra politics, wacky
× RELATED இந்தியா கூட்டணி நாளையே ஆட்சி அமைக்க...