×

ஹீரோ ஆவாரா வில்லன்? நடிகர் பிரகாஷ்ராஜ்

போக்கிரி  வில்லன் பிரகாஷ் ராஜ் அரசியல் களத்தில் ஹீரோவாகும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். பெங்களூருவில் பிறந்து வளர்ந்த பிரகாஷ் ராய் (54  வயது), செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிகாம் முடித்ததும் தூர்தர்ஷன்  தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். டூயட் படம் மூலமாக தமிழில் அறிமுகம் செய்த இயக்குனர் கே,பாலச்சந்தர் இவரை பிரகாஷ் ராஜ் ஆக்கினார். இன்னமும் கூட  கர்நாடகாவில் பிரகாஷ் ராய் தான். மணிரத்னம் நடத்திய நேற்று இன்று நாளை  நாடகத்தில் நடித்தவர், பின்னர் அவர் இயக்கிய இருவர் படத்தில் நடித்ததற்காக  சிறந்த துணை நடிகராக தேசிய விருது பெற்றார். கில்லி, போக்கிரி, சிங்கம் படங்களில் மிரட்டலான வில்லனாக தனி முத்திரை பதித்தவர், கதாநாயகனாகவும்,  குணச்சித்திர நடிகராகவும் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம்,மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில்  நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 2000க்கும் மேற்பட்ட  தெருக்கூத்து நாடகங்களிலும் நடித்திருக்கிறார் என்பது வியப்பூட்டும் தகவல்.

இயக்குனர்,  தயாரிப்பாளர், சமூக சேவகர்... என பன்முகத் திறனாளராக பரிணமித்தவர், கடந்த  சில ஆண்டுகளாக அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார். பாஜக மற்றும் பிரதமர் மோடியின் சில செயல்பாடுகளில் கடுமையான கருத்து வேறுபாடு கொண்டவர், 2017  செப்டம்பரில் தனது நண்பரும் எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் படுகொலை  செய்யப்பட்ட பிறகு ட்விட்டரில் ஜஸ்ட்ஆஸ்கிங் என்ற பக்கத்தை தொடங்கி  கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மக்களவை தேர்தலில் மத்திய  பெங்களூரு தொகுதி வேட்பாளராகக் களமிறங்கி உள்ள பிரகாஷ் ராஜ், கடந்த 10  ஆண்டுகளாக இங்கு எம்.பி.யாக இருந்து வரும் பாஜகவின் பி.சி.மோகன் மற்றும்  காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்துக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தி  இருக்கிறார்.

 இரண்டு பெரிய தேசிய கட்சிகளை எதிர்த்து சுயேச்சையாக ரவுண்டு  கட்டி பிரசாரம் செய்து வரும் பிரகாஷ் ராஜ் தனது வெற்றி வாய்ப்பு குறித்து  கூறியதாவது: இரண்டு தேசிய கட்சிகளும் தங்களை நன்றாக ஏமாற்றி  வந்திருக்கின்றன என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். கடந்த பத்து  ஆண்டுகளாக பதவியில் இருப்பவர் தொகுதியின் வளர்ச்சிக்காக என்ன  செய்திருக்கிறார் என்றால்... எதுவும் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது.  அரசியல் வியாபாரமாகி விட்டது. இதற்காக யாரையும் குறை சொல்வது தவறு. சரியான  நபர்களை தேர்வு செய்யத் தவறிவிட்டு லஞ்சம், ஊழல், மெத்தனம் என்று  புலம்புவதில் அர்த்தமில்லை. இதையெல்லாம் மக்களிடம் நேரில் எடுத்துச்  சொல்லும்போது அவர்கள் நன்கு புரிந்துகொள்கிறார்கள். மாற்று அரசியலுக்கு  கர்நாடகா மட்டுமல்ல… இந்தியாவும் தயாராகிவிட்டது என்றே நினைக்கிறேன். பி.சி.மோகனும்,  ரிஸ்வானும் பிரபலமானவர்கள் என்றால், பிரகாஷ் ராஜும் பிரபலம் தான். இந்த  தொகுதியில் என்னைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நான் வெறும்  நடிகனல்ல. எழுத்தாளராக அரசியல் கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறேன்.

பல்வேறு பிரச்னைகளுக்காக களமிறங்கி போராடியும் இருக்கிறேன். எனது  அறக்கட்டளை மூலமாக செய்துள்ள நற்பணிகளையும் மக்கள் நன்கு அறிவார்கள். நான்  சினிமா வசனம் பேசுவதற்காக இங்கே வரவில்லை. உண்மையான பிரச்னைகளை தான்  எடுத்துக் கூறுகிறேன். போக்குவரத்து நெரிசலில் பெங்களூரு நகரம் மூச்சுத்  திணறுகிறது. இங்கு 3 லட்சம் தனியார் டாக்சிகள் ஓடுகின்றன. ஆனால், 6500  அரசுப் பேருந்துகள் தான் உள்ளன. 50 சதவீதம் பேர் இதையே நம்பி உள்ளனர்.  குறைந்தபட்சம் 15,000 பஸ்களாவது வேண்டும். பெங்களூரு என்பது வெறும் விதான் சவுதா மட்டுமில்லை. 2000 குடிசைப்பகுதிகள் உள்ளன. மருத்துவம், கல்வி என்று எல்லா விஷயத்திலும் பின்தங்கியுள்ளோம். அனைத்தையும் என்னால் மாற்றிவிட  முடியும் என்று சொல்லவில்லை. முடிந்த அளவுக்கு முயற்சிப்பேன் என்றுதான்  சொல்கிறேன். மக்கள் என்னை நம்புகிறார்கள். வெற்றி நிச்சயம்… என்கிறார்  பிரகாஷ். பெங்களூரு சென்ட்ரல் வாக்காளர்கள் இந்த வில்லனை  ஹீரோவாக்குவார்களா? பார்க்கலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prakash Raj , Hero, villain, actor, prakashraj
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்