×

கூடலூரில் பெரும் பரபரப்பு எடப்பாடி பிரசார வேனை முற்றுகையிட்டு கோஷம்

அலங்காநல்லூர்:  மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியதாவது: பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணையை பலப்படுத்துவற்கு தேவையான கட்டுமான பொருட்களை சாலை மார்க்கமாக கொண்டு செல்ல கேரள அரசு தடை விதித்துள்ளது. அணைப்பகுதி வழியாகவே சென்று மராமத்து பணிகள் மேற்கொள்வதற்காக 2 படகுகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த படகுகளை இயக்கவும் கேரள அரசு அனுமதிக்காமல் துன்பப்படுத்துகிறது. எனவே சட்ட நடைமுறைகளின் படி பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கும் நடவடிக்கை வேகப்படுத்தப்படும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நினைவு கூறும் விதமாக, ஜல்லிக்கட்டுக்கான நினைவு சின்னம் அமைக்கப்படும்’’ என்றார்.

சீர்மரபினர் திடீர் முற்றுகை: தேனி மாவட்டம், கூடலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று, வேனில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சீர்மரபினர் சங்க மாநில விவசாய அணி தலைவரான கூடலூர் செங்குட்டுவன் தலைமையில் 25 பேர் திரண்டனர். தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தங்களுக்கான சான்றிதழை டிஎன்டி என முழுமையாக திருத்தம் செய்யக்கோரி, முதல்வரின் வேனை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கிருந்த அதிமுகவினருக்கும், சீர்மரபினர் சங்க நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர். இதன்பின் சீர்மரபினர் சங்க நிர்வாகிகள், முதல்வரிடம் மனு கொடுத்தனர். பொதுமக்கள் அவதி: முதல்வர் பிரசார வருகைக்காக நேற்று காலை 6 மணி முதலே அலங்காநல்லூர் கேட்டுகடை ரோட்டில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. அதேபோல், பஸ்களை ஊருக்குள் செல்ல விடாமல் ஆங்காங்கே தடுத்து நிறுத்தியதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

முதல்வருக்காக காத்திருந்த முதியவர் மயங்கி சாவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்ய உசிலம்பட்டிக்கு வந்தார். இதில் பங்கேற்க வந்த அல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்த செல்லையா (65), நீண்டநேரம் கால் கடுக்க வெயிலில் காத்திருந்தார். பின்னர் அவர், பேரையூர் சாலை அரசு மருத்துவமனை அருகே நிழலுக்கு ஒதுங்க முயன்றபோது, நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்து இறந்தார். உசிலம்பட்டியில் முதல்வர் பிரசாரம் செய்தபோது, அமமுக வழக்கறிஞர்கள் பிரிவை சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதுதொடர்பாக 3 பேரை உசிலம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவில் பிறந்த ஆண்டிபட்டி மாஜி எம்எல்ஏ?

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே முதல்வர் பேசுகையில், ‘‘மக்களவைக்கு நடைபெறுவது பொதுத்தேர்தல். ஆனால், துரோகிகளின் சதியால் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்கிறோம். இந்த தேர்தலின் வெற்றி மூலம் அந்த துரோக கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டுவோம். ஆண்டிபட்டியில் ஏற்கனவே எம்எல்ஏவாக (தங்கதமிழ்செல்வன்) இருந்தவர், சொகுசு ஓட்டல்களில் தங்கி நடைப்பயிற்சி மேற்கொண்டு, நீச்சல் குளத்தில் குளித்து வருகிறார். ஏதோ அமெரிக்காவில் பிறந்தவரை போன்று நடந்து கொள்கிறார்’’ என்றார். முதல்வர் பிரசாரத்திற்காக அழைத்து வரப்பட்டவர்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை சுட்டெரிக்கும் வெயிலில் பல மணி நேரம் காத்திருந்தனர். தண்ணீர் கேட்டு வாக்குவாதம் செய்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் முதல்வர் வருவதற்கு முன்பு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kallur , slogan in Kallur ,great slogan
× RELATED கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை