×

22 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது பஞ்சாப் சிஎஸ்கே அபார வெற்றி

சென்னை,: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், 22 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் வில்ஜோயன், முஜீப் நீக்கப்பட்டு கிறிஸ் கேல், ஆண்ட்ரூ டை இடம் பெற்றனர். சென்னை அணியில் பிராவோ (காயம்), மோகித், ஷர்துல் தாகூருக்கு பதிலாக குகலெஜின் (அறிமுகம்), ஹர்பஜன், டு பிளெஸ்ஸி சேர்க்கப்பட்டனர். சிஎஸ்கே தொடக்க வீரர்களாக வாட்சன், டு பிளெஸ்ஸி களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 56 ரன் சேர்த்தது. வாட்சன் 26 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆர்.அஷ்வின் சுழலில் சாம் கரன் வசம் பிடிபட்டார். அடுத்து டு பிளெஸ்ஸியுடன் ரெய்னா இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தனர்.  பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த டு பிளெஸ்ஸி 54 ரன் (38 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 17 ரன் எடுத்து அஷவின் சுழலில் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் டோனி - அம்பாதி ராயுடு ஜோடி அதிரடியில் இறங்க, சென்னை ஸ்கோர் எகிறியது. ஆண்ட்ரூ டை வீசிய 18வது ஓவரில் 11 ரன் கிடைத்தது. அடுத்து சாம் கரன் வீசிய 19வது ஓவரில் 19 ரன்னும், முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் 14 ரன்னும் கிடைக்க, சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன் குவித்தது. டோனி 37 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ராயுடு 21 ரன்னுடன் (15 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஆர்.அஷ்வின் 4 ஓவரில் 23 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, கிங்ஸ் லெவன் அணி 20 ஓவரில் 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. லோகேஷ் ராகுல், கிறிஸ் கேல் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

ஹர்பஜன் சிங் வீசிய 2வது ஓவரில் கிறிஸ் கேல் (7 ரன்), மயாங்க் அகர்வால் (0) விக்கெட்டை பறிகொடுக்க, பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அந்த ஓவரில் ரன் ஏதும் எடுக்கப்படாமல் டபுள் விக்கெட்மெய்டனாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ராகுல் - சர்பராஸ் கான் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 110 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். எனினும், கடைசி 3 ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 46 ரன் தேவைப்பட்டதால் களத்தில் பரபரப்பு நிலவியது. ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ராகுல் 55 ரன் (47 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் மில்லர் 6 ரன், சர்பராஸ் கான் 67 ரன் (59 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன் மட்டுமே எடுத்து 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மன்தீப் 1, சாம் கரன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் ஹர்பஜன், குகலெஜின் தலா 2, சாஹர் 1 விக்கெட் வீழ்த்தினர். ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Punjab ,match ,CKK , Punjab's, CsK won the match, 22 runs
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்