×

பாகிஸ்தானின் போர் விமானம் எப்.16 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக இந்திய விமானப்படை தகவல்

டெல்லி: பாகிஸ்தானின் போர் விமானம் எப்.16 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி காஷ்மீரின் நவ்சேரா பகுதியில் பாகிஸ்தானின் 11 எப் 16 ரக போர் விமானங்கள், 13 ஜே.எப்.17 ரக விமானங்கள், மற்றும் மிராஜ் விமானங்கள் இந்திய ராணுவ நிலைகள் மீது குண்டு வீசுவதற்காக எல்லைத் தாண்டி வந்தன. இந்திய விமானப்படையினர் மிக் 21 பைசன் விமானங்கள் மூலம் அவற்றை எதிர்கொண்டு விரட்டியடித்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், எப் 16 விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினார். ஆனால் எப்.16 விமானங்களைப் பயன்படுத்தவே இல்லை என்று பாகிஸ்தான் மழுப்பி வருகிறது. எப்.16 விமானம் புறப்பட்ட இடத்திற்கு திரும்பவே இல்லை என்பதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறுகின்றனர். விமானம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் விழுந்து விட்டதால் நேரடியாக ஆதாரம் காண்பிக்க முடியாத போதும் இதர ஆதாரங்கள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்.16 தான் என்பதை நிரூபிக்க இந்திய விமானப் படையினரிடம் போதுமான ஆதாரம் இருப்பதாக கூறப்படுகிறது.ராடார் கருவிகளில் பதிவான சமிக்ஞைகள், எப் 16 மாயமான போது கண்காணிப்புத் திரையில் இருந்து அது காணாமல் போன குறியீடுகள், மின்னணு கையெழுத்துகள், இரண்டு பாராசூட்டுகளில் விமானிகள் குதித்து உயிர்தப்பியதை நேரில் கண்ட சாட்சிகள் என ஆதாரங்களை இந்திய விமானப்படை திரட்டியுள்ளது.

அபிநந்தன் வர்த்தமான் அந்த எப்.16 விமானத்தை விரட்டிச் சென்று பாகிஸ்தான் எல்லையில் அதனை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்திய அடுத்த 8 வினாடிகளில் அந்த விமானத்தின் தடயம் காணாமல் போனது. எப்.16 விமானத்தின் தடத்தில் இருந்து எந்தவித சமிக்ஞையும் வரவில்லை. மற்ற பாகிஸ்தான் விமானங்கள் பாகிஸ்தான் விமான தளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் எப்.16 விமானத்தின் கதி குறித்த எந்த வித தகவலும் பாகிஸ்தானுக்கு இல்லை. ரேடியோ அலைவரிசைகள் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளின் பேச்சுகளை இடைமறித்து உளவுத்துறையினர் கேட்டதில், இரண்டு பறவைகள் அழிக்கப்பட்டன என்று அதிகாரிகள் பேசிக் கொண்டிருந்தனர். ஒன்று எப்.16 விமானம் மற்றொன்று அபிநந்தனின் மிக் 21 பைசன்விமானம். பாராசூட் மூலம் குதித்து உயிர்த் தப்பிய இரண்டு விமானிகளில் ஒருவர் அபிநந்தன் என்றும் மற்றவர் பாகிஸ்தான் விமானத்தின் விமானி என்றும் கூறப்படுகிறது. அபிநந்தன் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் எல்லையில் 6 கிலோமீட்டர் தூரத்தில் தரையிறங்கியதால் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian Air Force ,Pakistan , Indian Air Force,reported ,evidence,Pakistan's fighter,shot down
× RELATED கொரேனாவால் உயிரிழப்போரின் உடலை...