×

கொழும்பு, மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய 95 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்: 12 பயணிகள் சிக்கினர்

சென்னை: கொழும்பு, மலேசியாவில் இருந்து 95 லட்சம் மதிப்புடைய தங்க கட்டிகள், செயின்களை சென்னைக்கு  கடத்திய 12 பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.   கொழும்புவில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த அன்சாரி (25), அப்துல் மாலிக் (32), பக்ருதீன் (28), சதாம் உசேன் (30), நைனார் முகமது (45), குரேசி (36) ஆகிய 6 பேரும் சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு சென்று, திரும்பி வந்தனர்.

இவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர். ஆனால், எதுவும் இல்லை. இதையடுத்து சுங்க அதிகாரிகள் இவர்களை அனுப்பினர். இவர்கள் 6 பேரும் வெளியில் சென்றபோது சுங்க அதிகாரிகளை பார்த்து ஏளனமாக  கேலியுடன் சிரித்துக்கொண்டே சென்றனர். இதனை கவனித்த சுங்க அதிகாரிகள் அந்த 6 பேரையும் மடக்கி உள்ளே அழைத்து வந்தனர். அவர்களது காலணி, மற்றும் சூட்கேஸ்களை சோதித்தனர். பின்னர், 6 பேரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். அப்போது 6 பேரின் ஆசன வாய்க்குள் ரப்பர் ஸ்பாஞ்சுகளை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்தனர்.  அதை பிரித்து பார்த்தபோது அதற்குள் தங்க கட்டிகள் இருந்தன. 6 பேரின்  உடலில் இருந்து ஒரு கிலோ 300 கிராம் தங்க கட்டிகளை  சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 43 லட்சம். இதனை தொடர்ந்து 6 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இதேபோல் நேற்று காலை 9 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மலேசிய  நாட்டை சேர்ந்த சாந்தா (42), பாலமுத்து (42), குமார் (45), சென்னையை சேர்ந்த தமிம் அன்சாரி (44), அஜீஸ்கான் (28), ராமநாதபுரத்தை சேர்ந்த அஜீஸ் அலி (44) ஆகிய 6 பேர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர்களது உடமைகளை சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. ஆனாலும் பெண் பயணி சாந்தாவை பெண் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது அவரது மேல் ஆடைக்குள் தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதேபோல மற்ற ஆண் பயணிகளின் உள் ஆடைகளை சோதனையிட்ட போது அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து 1.5 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் சர்வதேச மதிப்பு 49 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் மலேசிய நாட்டு பெண் பயணி உள்பட 6 பேரையும் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடை பெற்ற சோதனையில் மொத்தம் 95 லட்சம் மதிப்புள்ள 2.8 கிலோ கொண்ட தங்க கட்டிகள் மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,Malaysia , Colombo, Malaysia, Chennai, Gold Tumors
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...